Skip to main content

கடமைப் பொறுப்பை நிறைவேற்றாத ஆளுநர் - சி.பி.ஐ. கண்டனம்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
CPI Condemn to Governor RN Ravi

ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்கவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று (பிப்.12ம் தேதி) ஆளுநர் உரையுடன் துவங்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்தது. அதேபோல், இன்று சட்டமன்றம் கூட்டப்பட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற இருந்தார். இறுதியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஓரிரு நிமிடங்கள் மட்டுமே உரையை நிகழ்த்தி அரசின் முழு உரையை புறக்கணித்தார். பிறகு சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். 

அந்த வகையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறையில் ஆண்டு தோறும் சட்டமன்றப் பேரவையில் உரையாற்றி கூட்டத் தொடரை தொடங்கி வைப்பது அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநரின் கடமைப் பொறுப்பாகும். வரும் ஆண்டில் (2024-25) மக்கள் பிரச்சினைகள் மீதும், நிதி நிர்வாக முறையிலும் அரசின் கொள்கை நிலை என்ன? எந்த இலக்கை நோக்கி அரசு பயணிக்கும்? என்பது போன்ற அரசின் கொள்கை நிலையை பேரவையின் கவனத்துக்கு கொண்டு, அதன் மீது எதிர்த்தரப்பின் கருத்துகளை அறிவது என்பது  அரசியலமைப்பு சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ள கடமையாகும். 

CPI Condemn to Governor RN Ravi

பேரவையில் உரையாற்றும் ஆளுநருக்கு பேரவையின் வாயிலாக ‘நன்றி தெரிவிக்கும்’ தீர்மானம் நிறைவேற்றி அவருக்கு அனுப்புவது அவை வழியாக கடைபிடித்து வரும் மரபாகும். இந்த வழக்காறுகளுக்கும். மரபுகளுக்கும் மாறாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, கடந்த ஆண்டு நடந்து கொண்டது போலவே இந்த ஆண்டும் அவையில் மரபுகளை நிராகரித்து, மக்கள் பிரதிநிதிகள்  உணர்வுகளையும்  புறக்கணித்துள்ளார். 

கூட்டத் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி நிறைவில் நாட்டுப் பண் இடம் பெறுவதும் நீண்ட பல ஆண்டுகளாக பின்பற்றி வரும் நல் மரபாகும். இதற்கு மாறாக ஆளுநர் ஆர்.என். ரவி, அரசுடன் இணைந்து தயாரித்த உரையை வாசித்து பேரவைக்கு வழங்க மறுத்து அமர்ந்து விட்டதும், நாட்டுப் பண் இசைக்கும் முன்பு வெளியேறியதும் ஜனநாயக மாண்புகளை சிதைத்து, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்