தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 'கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னரே சார்ஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் கைகளின் மூலமாகாவும், இருமல் அல்லது தும்மல் மூலமாகவும் பரவுகின்றது என்பதும் கண்டறிந்து உள்ளோம்.
எனவே, கைகளை தினமும் 15 முறையாவது கழுவ வேண்டும், கை வைக்க கூடிய இடங்களை சுத்தமாக வைக்க வேண்டும், தும்பும் போது மூக்கை கை குட்டைகளால் பொத்திக்கொள்ள வேண்டும். முதியவர்களும், ஒன்று அல்லது இரண்டு வயது குழந்தைகளையும் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். விரைவில் தமிழகத்திலும் சிறப்பு மருத்துவ பரிசோதனை வசதிகள் அமைக்கப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மருந்து கிடையாது என்பது பொய்யான தகவல். முறையான மருத்துவ சிகிச்சையின் மூலம் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.' என்றவர், 'சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த 78 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்கள் அனைவரும் 28 நாட்களுக்கு வீடுகளில் வைத்து கண்காணிக்கப்படுவார்கள். சளி, இருமல், காய்ச்சல் தான் அறிகுறிகள், எனவே அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
மற்றவர்களிடம் கைகுலுக்குவதை தவிர்த்து, நமது பாரம்பரிய முறையில் வணக்கம் சொல்வதே சிறந்தது. கொரோனா வைரஸை எதிர்கொள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.