சேலத்தில், ஒரே தெருவில் 26 பேருக்கு கரோனா நோய்த்தொற்றைப் பரப்பியதாக வெள்ளித் தொழில் அதிபர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கரோனா நோய்த்தொற்றைத் தடுக்க மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதாரத்துறை, காவல்துறை என ஒட்டுமொத்த நிர்வாகமும் தீவிர களப்பணியில் இறங்கியுள்ளன.
குறிப்பாக, வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சேலத்திற்கு வருபவர்களில் சராசரியாக 40 சதவீதம் பேருக்குக் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது இதுவரையிலான பரிசோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சேலத்திற்குள் நுழைபவர்களை கருப்பூர் சோதனைச் சாவடியில் காவல்துறை மூலம் தணிக்கை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றாலும், பலர் திருட்டுத்தனமாக இ-பாஸ் இல்லாமல் கிராமச் சாலைகள் மூலமாக மாநகருக்குள் நுழைந்து விடுகின்றனர்.
அவ்வாறு குறுக்கு வழியில் நுழைபவர்கள் மூலம் நோய்த்தொற்று அபாயம் இருப்பதால், அதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அல்லது சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும்படி மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, சேலம் மாநகராட்சி 46ஆவது கோட்டத்திற்கு உட்பட்ட தாதகாப்பட்டி ஸ்ரீரங்கன் தெருவில் 40 வயதுள்ள வெள்ளித் தொழில் அதிபர் ஒருவர், மஹாராஷ்டிராவில் இருந்து சேலம் வந்திருப்பதாகவும், ஆனால் அவர் தன்னை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவில்லை என்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சந்தேகத்திற்குரிய நபரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலைச் சொன்னார். வெள்ளி வியாபாரம் தொடர்பாக மஹாராஷ்டிராவுக்குத் திருட்டுத்தனமாகச் சென்றுவிட்டு அங்கிருந்து இ-பாஸ் இல்லாமல் சேலம் வந்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவருக்கும், குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் வெள்ளித் தொழில் அதிபர், அவருடைய மனைவி மற்றும் குழந்தைள் உள்பட 4 பேருக்குக் கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விசாரணையில் வெள்ளித் தொழில் தொடர்பாக அதே தெருவில் உள்ள சில வெள்ளிப் பட்டறை உரிமையாளர்களை நேரில் சந்தித்துப் பேசியதும் தெரிய வந்தது. இதனால் அந்தத் தெருவில் உள்ள 80 வீடுகளில் வசிக்கும் 120 பேருக்கு கரோனா கண்டறியும் சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அந்த ஒரே தெருவில் மட்டும் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி அதிகாரிகள், தொற்று கண்டறியப்பட்ட அனைவரையும் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்தத் தெருவும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. தெருவிற்குள் செல்லும் எல்லா வழிகளும் தடுப்புக்கட்டைகள் வைத்து மூடி சீல் வைக்கப்பட்டன. அங்குள்ள மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
நோய்த்தொற்றாளர்கள் கடந்த ஒரு வாரத்தில் யார் யாரைச் சந்தித்தார்கள், எங்கெல்லாம் சென்றார்கள் என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே, இ-பாஸ் இல்லாமல் திருட்டுத்தனமாகச் சேலத்திற்கு நுழைந்ததுடன், அதுகுறித்த தகவல்களை மறைத்தது மற்றும் மிகப்பெரிய அளவில் கரோனா நோய்ப் பரவலுக்கு காரணமாக இருந்ததாக அந்த வெள்ளித் தொழில் அதிபர் மீது மாநகராட்சி நிர்வாகம் புகார் அளித்தது. அதன்பேரில், சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினர் வெள்ளித்தொழில் அதிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வெள்ளித்தொழில் அதிபர் மற்றும் ஸ்ரீரங்கன் தெருவில் உள்ள நோய்த் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.