Skip to main content

விபத்துகளை தடுக்க சாலையில் வர்ணம் பூசிய போலீசார்! பொதுமக்கள் பாராட்டு!!

Published on 26/10/2021 | Edited on 26/10/2021

 

Painted cops on the road to prevent accidents
                                                             மாதிரி படம்

 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உசிலம்பட்டி சாலையில் விபத்துகளைத் தடுக்கும் வண்ணம் வேகத்தடைகள் மீது வர்ணம் பூசும் போலீசாரின் செயலுக்குப் பாராட்டுக்கள் குவிந்துவரும் வேளையில், நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலைத்துறையினருக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டுவருகிறது. வத்தலக்குண்டிலிருந்து உசிலம்பட்டி செல்லும் சாலை நெடுகிலும் உள்ள வேகத்தடைகளில் பூசப்பட்ட வர்ணங்கள் அழிந்துவிட்டதால் வேகத்தடை இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலைதடுமாறி பல விபத்துக்களை சந்தித்துவருகின்றனர்.

 

இதனையடுத்து, விருவீடு போலீசார் தங்கள் சொந்த முயற்சியில் வேகத்தடைகளை சுத்தம் செய்து, அதில் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் செய்ய வேண்டிய பணிகளைப் போலீசார் முன்வந்து செய்ததற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் சாலை விபத்துகளைத் தவிர்க்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

இதுகுறித்து நாம் தமிழர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மாயன் கூறும்போது, “வத்தலக்குண்டிலிருந்து விருவீடு வரையிலான சாலைகளில் பல இடங்களில் வேகத்தடைகள் மீது பூசப்பட்ட வர்ணங்கள் அழிந்து வேகத்தடை இருப்பதே தெரியவில்லை. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழ வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும், விருவீடு நான்குமுனை சந்திப்பு, கண்ணாபட்டி பாலம், சாந்திபுரம் பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க  எச்சரிக்கை விளக்கு அமைக்க  வேண்டும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்