கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர், அ.திமு.க. நகர 18வது தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக உள்ளார். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றைப் பதிவு செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து, பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகரான ஷானாவாஸ், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், காவல்துறையினர் அருண்குமாரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தியும் வந்துள்ளனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணைக்குப் பின்னர், அருண்குமார் மீது அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அதிமுக பிரமுகர் அருண்குமார் கைது செய்யப்பட்ட விவகாரத்தைத் தெரிந்த பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ மற்றும் ஏராளமான அதிமுகவினர் காவல்நிலையம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் போராட்டம் நடத்திய அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து பரீசீலிப்பதாக கூறினர். அவர்கள் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அ.திமு.க.வினர் காவல்நிலையத்தை விட்டு கலைந்து சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.