திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமாக ஆண்டாள் மற்றும் லட்சுமி என 2 யானைகள் உள்ளன. இவற்றின் பாகங்களாக ராஜேஷ், அப்பு, சரண் ஆகியோர் உள்ளனர். ஆண்டாளை கவனிக்கும் ராஜேஷ் சீனியர் என்பதால் லட்சுமியை கவனிக்கும் பாகன்கள் அப்பு மற்றும் சரண் ஆகியோர் அவரது கட்டுப்பாட்டில் பணியாற்றி வருகின்றனர். நேற்றைய தினம் ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகியவை மழையில் நனைந்து விளையாடும் வீடியோ வெளியானது.
இந்த வீடியோ மீடியாக்களுக்கு கொடுக்கப்பட்டு நியூஸ் சேனல்களில் செய்தியானது. கடந்த சில நாட்களாக கோவிலில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், யானைகள் எப்போது வெளியே வந்தன. அவை மழையில் நனையும் போது யார் வீடியோ எடுத்தது? என பக்தர்கள் சிலர் அதிகாரிகளிடம் கேள்வி கேட்க, அதிகாரிகளால் பதில் சொல்ல முடியவில்லை. இதுதொடர்பாக கோவில் அலுவலர்கள் அவசர அவசரமாக நடத்திய விசாரணையில், யானைகளை வெளியே கொண்டுவந்து மழையில் நனைய வைத்து வீடியோ எடுத்தது பாகன் கோபி என்பது தெரியவந்தது.
இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. யானைகள் கோவிலின் சொத்து. பாகன்களும் பணியாளர்கள்தான். கோவிலின் முறைக்காக யானைகள் அழைத்து வர வேண்டும் பின்னர் யானைகளை கொட்டைகையில் அடைக்கப்பட வேண்டும். அவற்றை பாராமரிக்கும் பணியினை மட்டும் பாகன்கள் செய்ய வேண்டும். ஆனால் நேற்றைய தினம் யாருடைய அனுமதியும் இல்லாமல் கொட்டையில் இருந்து யானைகளை பாகன்கள் தங்களது விருப்பத்திற்கு வெளியே அழைத்து வந்து சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக மழையில் நனைய விட்டு சினிமா சூட்டிங் போல வீடியோ பதிவுசெய்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் பக்தர்கள்.