Skip to main content

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

சார்ந்த செய்திகள்