Skip to main content

தேர்வு ரத்து: வற்புறுத்தலுக்கு பிறகுதான் இந்த முடிவு என கே.பாலகிருஷ்ணன் தாக்கு!!!

Published on 09/06/2020 | Edited on 09/06/2020
CPIM

 

சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.  அப்போது, "தமிழகத்தில் பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வும், 12ம் வகுப்புக்கான ஒரு பேப்பருக்கான பொதுத்தேர்வு நடைபெற இருந்த சூழ்நிலையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கரோனா தொற்று இந்தியாவையும் தமிழகத்தையும் மிக மோசமான அளவில் பாதித்துள்ளது.


இந்தப் பின்னணியில் தமிழக அரசே பொதுத்தேர்வுகளை ஒத்திவைத்தது. மீண்டும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டபோது நோய் தொற்று அதிகமாக உள்ளது என அனைவரும் வற்புறுத்தியதன் பேரில் அதனை கணக்கில் கொண்டு ஜூன் 15ம் தேதி அரசு ஒத்தி வைத்தது.

ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் கடந்த காலங்களைவிட நோய் தொற்று மிக மோசமாக பரவி வருகிறது. இறப்புகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி வருகிறது. இந்தியாவிலேயே நோய்தொற்று அதிகம் பாதித்த இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆகையால் இந்த தேர்வுகளை இப்போது நடத்த வேண்டாம் என அனைவரும் வலியுறுத்தினார்கள். ஆனால் அரசாங்கத்தை பொறுத்தவரை இதையெல்லாம் கவலைப்படாமல் தேர்வுகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மும்முரமாக செய்து வந்தனர். 

 

 


குறிப்பாக மே 8-ந்தேதி திங்களன்று காலை முதல் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு அனுமதி சீட்டு வழங்கும் பணியை செய்திருந்தனர். அதேபோல ஆசிரியர்களை எல்லாம் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டு தேர்வு மையங்களை சரி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.  எப்படியாக தேர்வுகளை நடத்த வேண்டும் என அரசு கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுத்திய நிலையில் எதிர்கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பேசி இப்போது உள்ள சூழ்நிலையில் தேர்வு நடந்தால் மோசமான விளைவுகளை உருவாக்கும் என்று மே10- ந்தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் போராட்டம் நடத்துவதற்கு அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து பல கேள்விகளை எழுப்பி தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்பது, அரசு பொறுப்பேற்றுக் கொள்ளுமா? என கேட்டுள்ளது.  இந்த சூழ்நிலையில் தமிழக அரசு தேர்வுகளை ரத்து செய்வது என அறிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் இவ்வளவு வற்புறுத்தலுக்கு பிறகு தான் இந்த முடிவுக்கு அரசு வந்துள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை அரசின் முடிவு பல லட்சம் மாணவர்களின் உயிரை காப்பாற்ற ஏதுவாக அமைந்துள்ளதாக கருதுகிறேன்" என தெரிவித்துள்ளார்.   
 
 

 

சார்ந்த செய்திகள்