வேங்கைவயலில் தனி நீதிபதி சத்தியநாராயணா குழு ஆய்வு செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் தனிப்படை போலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணைக் குழுவை மாற்றக் கோரிக்கை எழுந்த நிலையில், சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றப்பட்டது. ஆனால், 4 மாதங்கள் கடந்தும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. வழக்கமான வழக்குகளைப் போல இல்லாமல் அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட வேண்டிய வழக்காக உள்ளதால் தண்ணீரில் மனிதக்கழிவு கலந்ததை ஆய்வு செய்து அதில் 2 ஆண்கள், ஒரு பெண்ணின் கழிவு கலந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யாருடைய கழிவு கலக்கப்பட்டது என்பதை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி கேட்கப்பட்டு முதல் கட்டமாக 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டதில் 3 பேர் மட்டுமே பரிசோதனைக்கு ஆஜரானார்கள். மீதமுள்ள 8 பேர் நீதிமன்றம் சென்றுள்ளனர். இரண்டாம் கட்டமாக இறையூரில் 8 வேங்கைவயலில் 2 பேர் என 10 பேரிடம் திங்கள் கிழமை டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சத்தியநாராயணா குழுவினர் வேங்கைவயல் கிராமத்திற்குச் சென்று தண்ணீர் தொட்டிகளை ஆய்வு செய்துள்ளனர். ஆய்வுக்குப் பிறகு ஆய்வுக்கூட்டம் நடந்து வருகிறது.