Skip to main content

''அழுகாத... நானே உனக்கு புருஷனா கிடைப்பேன்...'' -தற்கொலைக்கு முன்பு கல்லூரி மாணவனின் உருக்கமான கடிதம்!

Published on 29/07/2020 | Edited on 29/07/2020
College student

 

 

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜெகநாதன் மகன் நித்திஷ்குமார் தனியார் கல்லூரி ஒன்றில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார். பின்னர் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டபோது, அமைந்தகரை பகவதி அம்மன் கோவில் அருகே உடலில் பச்சை குத்தும் (‘டாட்டூ’) கடையில் வேலை செய்து வந்தார்.

 

கடந்த இரணடு தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கடைக்கு சென்ற நித்திஷ்குமார், அடுத்த நாள் காலை நீண்டநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. வீட்டில் இருந்தவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை போனையும் எடுக்கவில்லை. பின்னர் வீட்டில் உள்ளவர்கள் நித்திஷ்குமாரின் தம்பியை என்ன ஆனது என கடைக்கு சென்று விசாரித்து வர அனுப்பியுள்ளனர். 

 

அங்கு கடையின் உள்ளே நித்திஷ்குமார், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அவரது தம்பி அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் தூக்கில் தொங்கிய நித்திஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

நித்திஷ்குமார், ஆன்லைன் விளையாட்டில் விளையாடி வந்ததாகவும், அதில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

 

மேலும் நித்திஷ்குமார் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர், “என்னோட இந்த முடிவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை, நான் தான். மிகவும் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த என்னோட பணத்தை எல்லாம் நான் விளையாட்டில் தோற்றுவிட்டேன். கடையில் இருந்தும் ரூ.20,000 எடுத்து விளையாடி தோற்றுவிட்டேன். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, பைத்தியம் ஆகிவிட்டேன்.

 

நான் எடுக்கிற முடிவு தப்புதான். எனக்கு வேற வழி தெரியவில்லை. என்னை மன்னிச்சிடுங்க சேகர் அண்ணா, உங்களை கேட்காம உங்க பணத்தை எடுத்து தப்பு பண்ணிட்டேன். அம்மா, அப்பா உங்களை எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும், மன்னிச்சிடுங்க.

 

என்னோட காதலிதான் என் உயிர். எல்லாமே அவதான். என்னை மன்னிச்சிரு. அடுத்த ஜென்மத்துல நானே உனக்கு புருஷனா கிடைப்பேன். அழுகாத, வீட்டுல உனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுப்பாங்க. என்னோட போன் பாஸ்வேர்டும் இதுதான்.

 

எல்லோருக்கும் தகவல் கொடுங்க, முக்கியமாக என் காதலிக்கு. கடைசியா அவ என்னை பார்த்ததும் என்னை தூக்கிட்டு போங்க. எல்லாருக்கும் சாரி, பணம் வென்றது. என் தம்பியை நல்லா பாத்துக்கோங்க” இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நித்திஷ்குமாரின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவரது நண்பர்களிடமும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்