பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்காகவே கலெக்டராக ஆசைப்பட்டதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
'காஃபி வித் கலெக்டர்' என்ற தலைப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா கலந்துரையாடல் நடத்தினார். அப்பொழுது மாணவர்களிடம் பேசிய அவர், ''ஸ்கூலுக்கு எல்லாம் லீவு விடணும்னா நாம கலெக்டர் ஆகணும் அப்படின்னு நினைச்சு தான் முதலில் கலெக்டராக ஆசைப்பட்டேன். முன்னாடி நான் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன். ஒரு நான்கு ஐந்து மாதம் தான் வேலை செய்தேன்.
அங்கு எப்படி என்றால் வேலைக்கு போகும்போது 8 மணிக்கு வந்து விட வேண்டும். ஆனால் பத்து மணி வரைக்கும் வேலை வாங்குவார்கள். சில நேரம் 11 மணி, 12 மணி ஆகிவிடும் வீட்டுக்குப் போக. அந்த டைமில் தான் நான் யுபிஎஸ்சி படிக்க வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக புத்தகங்கள் வாங்கி படிக்க ஆரம்பித்தேன். மாணவர்களான நீங்களும் பள்ளி புத்தகங்களை மட்டும் நீங்கள் படிக்காமல் நூலகங்களில் உள்ள அரசு போட்டித் தேர்வுக்கான புத்தகங்களையும் சமுதாய மேம்பாட்டிற்கான புத்தகங்களையும் ஆர்வமுடன் படிக்க வேண்டும்'' எனக் கோரிக்கை வைத்தார்.