கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளால் தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கஜா புயல் பாதிப்பால் 46 பேர் உயிரிழந்த நிலையில் நிவாரண பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
குறிப்பாக நாகை மற்றும் வேதாரண்யத்தில் அதன் பாதிப்பும் அதிகமாக உள்ளதால் அதிகமாக சேதமடைந்த பகுதிகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு நிவாரண நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் எடுக்க தமிழக அரசு முடிவெடுத்து பணிகளை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் புயல் நிவாரண பணிகளை சரிபார்க்க சென்ற அமைச்சர் ஓ.எஸ் மணியனை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் கன்னித்தோப்பில் நிவாரணப் பணிகளை பார்வையிட சென்ற ஓ எஸ் மணியன் அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அதேபோல் அமைச்சரின் வாகனத்தையும் மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புயல் பாதிப்புகளில் ஏற்பட்ட சேதங்களுக்கு சரியான நிவாரண நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக்கூறி அமைச்சரை முற்றுகையிட்டதாகவும், வாகனங்கள் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.