Skip to main content

தூய்மை பணியாளருக்கு பாராட்டு... நெகிழ்வை ஏற்படுத்திய தலைமைச் செயலாளரின் கடிதம்!

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

TN

 

சென்னையில் குப்பையில் கிடந்த தங்கத்தைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவத்தில் பெண் தூய்மைப் பணியாளர் மேரிக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. கடந்த மார்ச் மாதம் சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகரைச் சேர்ந்த கணேசராமன் என்பவர் தங்க நாணயம் ஒன்றை வாங்கி கவரில் போட்டு வைத்திருந்தார். அதனை அவரது மனைவி தெரியாமல் குப்பையில் போட, இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்தப் புகாரை அடுத்து இதுகுறித்த தகவல் தூய்மைப் பணி மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளரான செந்தமிழ் செல்வன் என்பவரிடமும் சொல்லிவைக்கப்பட்டது. இந்நிலையில், குப்பை தரம் பிரித்தலில் ஈடுபட்டுவந்த மேரி என்ற தூய்மைப் பணியாளர், வேலையின்போது தங்க நாணயம் இருந்த கவரைக் கண்டறிந்து நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் முன்னிலையில் மேரியே தனது கையால் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தை உரியவரிடம் ஒப்படைத்தார். தூய்மைப் பணியாளரின் இந்த நேர்மைக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன.

 

IAS



இந்த சம்பவத்தில் நேர்மையாக செயல்பட்ட தூய்மைப் பணியாளரைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு தன்னுடைய சொந்த கையெழுத்தில் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,  

 

ias



'அன்புள்ள மேரி அவர்களுக்கு
வணக்கம்
தேவையிருக்கும் இடத்தில் காணப்படும் தூய்மையே மகத்தானது.
குப்பையில் கிடந்த தங்கத்தைக் கண்டுபிடித்து
உரியவரிடம் ஒப்படைத்த உங்கள் நேர்மையின் காரணமாக
உங்களிடம் இருக்கும் நேர்மையான உள்ளத்தை
எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது.

நீங்கள் தூய்மைப்பணியாளர் மட்டுமல்ல
தூய்மையான பணியாளர்.

உங்கள் நேர்மைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
குறுக்குவழிகளெல்லாம் நேர்வழியைக் காட்டிலும் நீளமானவை
என்பதற்கு நீங்கள் சான்று'

என குறிப்பிட்டுள்ளார் தலைமைச் செயலாளர் இறையன்பு. நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தக் கடிதத்திற்கு வரவேற்புகள் அதிகரித்துள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்