Skip to main content

“ஹஜ் பயணத்திற்கு சென்னையிலிருந்து செல்லும் நடைமுறை தொடர வேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

Published on 11/11/2021 | Edited on 11/11/2021

 

Chief Minister's letter to the Prime Minister

 

ஹஜ் புனித யாத்திரைக்குச் செல்ல சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்ளும் நடைமுறை தொடர வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 2022ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்ள ஏதுவாக, உரிய நடவடிக்கையினை எடுத்திட இந்தியப் பிரதமருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

சமீபத்தில் மத்திய அரசின் ஹஜ் கமிட்டி வெளியிட்டுள்ள ஹஜ் 1443 (H) 2022 அறிவிக்கையில், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள குறிப்பிடப்பட்டுள்ள விமான நிலையங்களின் பெயர் பட்டியலில் சென்னை விமான நிலையத்தின் பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் தனது கடிதத்தில், 2019ஆம் ஆண்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலிருந்து 4,500க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் சென்னையிலிருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்குச் சென்றுவந்துள்ளனர்.

 

இந்நிலையில், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களிலிருந்தும் யாத்ரீகர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த யாத்ரீகர்கள் விமானம் ஏறும் இடமாக தற்போது கேரளாவில் உள்ள கொச்சி விமான நிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது யாத்ரீகர்களுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து தனக்கு ஏராளமான கோரிக்கைகள் இஸ்லாமிய சமூகத்தினர், பொதுமக்கள், பல்வேறு அரசியல் குழுக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக பெறப்பட்டுள்ளதை முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

ஹஜ் யாத்திரையின் பெரும்பாலான யாத்ரீகர்கள் சென்னையிலிருந்து புறப்படும் நிலையில், 700 கி.மீ தொலைவில் உள்ள கொச்சியைப் புறப்படும் இடமாக அறிவிக்கப்பட்டது பெரும் சவாலாக உள்ளது. அதனை மாற்றி, யாத்ரீகர்களுக்குப் பயனளிக்கும் வகையில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, இந்தியாவின் நான்காவது பெரிய பெருநகரமாக விளங்கிடும் சென்னை விமான நிலையத்திலிருந்து தொடர்ந்து வழக்கம்போல புறப்படும் வகையில் அனுமதி வழங்கிட தொடர்புடைய துறையினருக்கு அறிவுறுத்துமாறு இந்தியப் பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்