Skip to main content

மகளிர் உரிமைத்தொகை திட்டப் பதிவு முகாமை முதல்வர் தொடங்கி வைத்தார்

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

The Chief Minister inaugurated the Women's Entitlement Scheme Registration Camp

 

மகளிர் உரிமைத்தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்து சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்' எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குதல், அரசாணை வெளியிடுதல், சிறப்பு அதிகாரிகள் நியமித்தல் எனப் பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முதல் கட்டமாக சென்னை மாநகராட்சி சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ணப்ப விநியோகம் ஆகியவை ரேசன் கடைகள் மூலமாக, நேரடியாக விண்ணப்பதார்களின் வீடுகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

 

இந்நிலையில், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி வைத்தார். அப்போது, முகாமிற்கு வந்திருந்த பெண்களிடம் விபரங்களைக் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, குடும்பத் தலைவிகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் தன்னார்வலர்கள் மூலம் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த முகாமில் சுமார் 1500 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். முகாமிற்கு வந்திருந்த மகளிரிடம் இந்தத் திட்டம் குறித்துக் கலந்துரையாடி வருகிறார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் இன்று முதல் 35 ஆயிரத்து 923 முகாம்கள் நடைபெற உள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்