Skip to main content

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் தீட்சிதர்கள் வைத்திருந்த பதாகை அகற்றம்

Published on 27/06/2023 | Edited on 27/06/2023

 

Chidambaram Nataraja Temple Kanakasabha will be kept by Dikshitars and remove the banner

 

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் தீட்சிதர்கள் வைத்திருந்த பதாகை போலீஸ் பாதுகாப்புடன் அதிரடியாக அகற்றப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் தரிசன விழாவையொட்டி பொதுமக்கள் 24, 25, 26, 27 ஆகிய 4 நாட்கள் வழிபடத் தடை விதித்துள்ளதாகக் கோவில் தீட்சிதர்கள் கனகசபை வாயிலில் அருகே பதாகை வைத்தனர்.

 

இது தமிழக அரசின் உத்தரவுக்கு எதிரானது எனக் கடந்த 24 ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை தில்லை அம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் காவல்துறையினர் பதாகையை அகற்றச் சென்றனர். அப்போது  அவர்களுக்குக் காவல்துறை சார்பில் சரியான பாதுகாப்பு இல்லாததால் கோவில் தீட்சிதர்கள், செயல் அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்து தகராற்றில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் செயல் அலுவலர், கூச்சலை சமாளிக்க முடியாமல் கோவிலிலிருந்து திரும்பிச் சென்றார்.

 

இதுகுறித்து செயல் அலுவலர் சரண்யா, பணி செய்ய விடாமல் தடுத்ததாகச் சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த நிலையில் ஜூன் 26 ஆம் தேதி கோவில் தரிசன விழா முடிந்த பிறகு மாலையில் கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் சந்திரன், சிதம்பரம் உதவி ஆட்சியர்(பொறுப்பு) பூமா, ஏஸ்பி. ரகுபதி மற்றும் இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் கொண்ட குழு மற்றும் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடியாகச் சென்று கனகசபையில்(சிற்றம்பல மேடை) தீட்சிதர்கள் வைத்திருந்த பதாகையை அகற்றினர். அந்தப் பகுதியில் பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளதால் கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதாகை அகற்றிய பிறகு கனகசபையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களை அனுமதிக்காமல் கோவில் தீட்சிதர்கள் கனகசபையின் கதவை மூடி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்