செங்கல்பட்டு மாவட்டம் கோவிலம்பாக்கம் அடுத்த நன்மங்கலம் ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாய் வெங்கடேஷ் (36). இவர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்குத் திருமணமாகி கீர்த்தி (30) என்ற மனைவியும், லியோரா ஸ்ரீ (10) என்ற மகளும் உள்ளனர். கீர்த்தி சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவர் பணிபுரியும் அதே பள்ளியிலேயே அவரது மகள் லியோரா ஸ்ரீ 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று கீர்த்தி வழக்கம்போல் தனது மகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். கோவிலம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் அந்த சாலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாகனங்கள் மெதுவாகச் சென்றன. இந்நிலையில், கீர்த்தி கோவிலம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பெட்ரோல் பங்க் எதிரே சென்றார். அப்போது வாகனம் சாலையில் உள்ள குழியில் ஏறி இறங்கியது. இதனால், நிலை தடுமாறிய லியோரா ஸ்ரீ வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி லியோரா ஸ்ரீ மீது ஏறி இறங்கியது. இதனால், லியோரா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆனால், இதை கவனிக்காத லாரியின் ஓட்டுநர் தொடர்ந்து லாரியை இயக்கினார். உடனே சாலையில் சென்ற பொதுமக்கள் கூச்சலிட்டனர். அதன்பிறகு, லாரியின் ஓட்டுநர் லாரியை நிறுத்தி அந்த இடத்தை விட்டுத் தப்பிச் சென்றார். அதனைத் தொடர்ந்து, இந்த சாலையில் இதுபோன்ற தண்ணீர் லாரிகள் அதிவேகமாக வருவதாகவும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்யும்படியும் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பலியான லியோரா ஸ்ரீயின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கு இருந்து சென்றனர்.
பின்னர், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்றவர் மன்னார்குடியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் டேவிட்ராஜன் (28) என்பது தெரியவந்தது. தப்பிச் சென்ற டேவிட்ராஜனை மேடவாக்கம் பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த லியோரா ஸ்ரீயின் உடலுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், “விபத்து நடந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் ஒரு சில இடங்களில் தடுப்புகள் போடப்பட்டுள்ளது. இதனால், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, எங்கு எல்லாம் பணிகள் முழுமை அடைந்துள்ளதோ அந்த பகுதி சாலையில் உள்ள தடுப்புகளை சிறிய அளவில் அகற்றி சாலையைக் கடப்பதற்கான ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளோம். மேலும், தண்ணீர் லாரி எடுத்துச் செல்லக்கூடிய வாகனங்கள் சட்டவிரோதமாகச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விபத்தில் தொடர்புடைய நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.