பட்டிவீரன்பட்டியில் பத்து இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி துவக்கிவைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே இருக்கும் பட்டிவீரன்பட்டியில் அண்ணாநகர் சாவடி, பஜார் ரேடியோ மைதானம், ஹை - ஸ்கூல் ரோடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் பட்டிவீரன்பட்டி ஊர்க் காவல் சங்கம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காணிப்பு கேமராக்களைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துச்சாமி துவக்கிவைத்தார்.
அதன்பின் பேசிய டி.ஐ.ஜி.முத்துச்சாமி, “மூன்றாவது கண் என்று தமிழக காவல்துறையால் அழைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அதி முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதனை நிரூபிக்கும் வகையில் நாடு முழுவதும், இந்தக் கண்காணிப்பு கேமராக்களின் உதவியால் கண்டுபிடிக்க முடியாத குற்றச் சம்பவங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், கண்காணிப்பு கேமராக்கள் உதவியோடு பல குற்றவாளிகளை அடையாளம் கண்டு தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதிலும் சில வழக்குகளில் புகார் கொடுக்க வந்தவர்களே குற்றவாளிகள் என்பதையும் இந்த கண்காணிப்பு கேமராக்கள் காட்டிக்கொடுத்துள்ளன. காவல்துறையால் தீர்த்து வைக்கப்படாத சில முக்கிய வழக்குகளை இந்த கண்காணிப்பு கேமராக்கள் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளன. இதனால் பொதுமக்கள், தங்கள் வீடுகளிலும் வியாபாரிகள் தங்களது வர்த்தக நிறுவனங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் பொருத்த வேண்டும்” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், பட்டிவீரன்பட்டி ஊர் காவல் சங்க தலைவர் பால் ராஜ், திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் இனிகோ, நிலக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் முருகன், பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் குமரேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.