நான்கு மாநிலங்களுக்கு இடையில் நீண்டகாலமாக இழுத்துக்கொண்டிருந்த காவிரி வழக்கிற்கான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியிருக்கிறது. இந்த தீர்ப்பு தமிழகத்திற்கு மேலும் பாதிப்பை உண்டாக்கும் என காவிரி விவசாயிகள் கலக்கம் அடைந்திருக்கின்றனர். உச்சநீதிமன்றத் தீர்ப்பை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் போராட்டங்களும் வெடிக்கத் துவங்கியுள்ளது.
இந்தநிலையில் "காவிரி நீர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண வேண்டுமெனில் நீர் மேலேற்றுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் "என்கிறார்கள் காவிரி டெல்டா விவசாயிகள்.
இதுகுறித்து காவிரி பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சுந்தர விமலநாதன் கூறுகையில்," கர்நாடகாவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஆண்டுதோறும் பெய்யும் மழையினால் உற்பத்தியாகும் தண்ணீர் கர்நாடக மாநிலம் வழியாக அரபிக்கடலில் வீனாக கலக்கிறது. அந்த தண்ணீர் கர்நாடகத்தின பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள உபரிதண்ணீர் சுமார் 2 ஆயிரம் டிஎம்சி அளவிற்கு கடலில் கலக்கிறது.
சீனா போன்ற மேலைநாடுகளில் நீர் மேலேற்றுத் திட்டம் அடிப்படையில் நேத்ராவதி, ஹேமாவதி நதிகளை இணைக்கிற அந்த நீர் மேலேற்றுத் திட்டத்தை அங்கு செயல்படுத்தினால், பல ஆண்டுகளாக உள்ள காவிரி நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகிடைத்துவிடும்.
2 ஆயிரம் டிஎம்சி தண்ணீரில் 300 டிஎம்சி தண்ணீர் மட்டும் எடுத்து இத்திட்டத்தினை செயல்படுத்தினால் கர்நாடகத்துக்கு தேவையான மின்சாரத்தையும் பெற்றுக் கொள்ள முடியும். கர்நாடகம் பிற மாநிலங்களுக்கு தர வேண்டிய தண்ணீரையும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் மாதம் வாரியாக தருவதற்கான தொழில்நுட்ப ரீதியாக, விஞ்ஞான ரீதியாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் செயல்படுத்த முடியும்.
இதனை நாங்கள் சொல்லவில்லை, கர்நாடக மாநிலத்தில் பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவரும், உலக வங்கியின் நீரியியல் ஆலோசகராக இருந்து ஓய்வு பெற்ற வருமான டாக்டர்.பவாணிசங்கர் 2004ம் ஆண்டியிலேயே இதுகுறித்து விழிப்புணர்வை தமிழக - கர்நாடக விவசாய பிரதிநிதிகளிடம் பல முறை விளக்கி கூறியுள்ளார்.
எனவே இந்த காவிரி நதிநீர் சிக்கலுக்கு அது ஒன்று தான் நிரந்தர தீர்வாக இருக்கும் என்பதால் அதனையே செயல்படுத்திட காவிரி டெல்டா விவசாயிகள் கர்நாடக முதல்வரையும், பிரதமரையும் நேரில் சென்று யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத சாத்தியமான இந்த திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்த வேண்டும். இனி தமிழக அரசை நம்பி பலனில்லை அந்த முயற்சியை விவசாயிகளை திரட்டி நாங்கள் செய்ய இருக்கிறோம்.
கடந்த 2013ல் காவிரி வழக்கு தீர்ப்பு தொடர்பாக அரசிதழில் வெளியானபோதே, காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும் உடன் அமைத்திட வேண்டும் என அறிவுறுத்தி இருந்தும், மத்திய அரசு இதுவரை பல்வேறு காரணங்களால் அமைக்க முன்வராமல் இருந்து வந்ததால் தான் கடந்த 6 ஆண்டுகளாக டெல்டாவில் குறுவையையும், இரு ஆண்டுகளாக சம்பாவையும் இழந்தது.
இனியும் மத்திய அரசு ஒருதலைபட்டமாக இருக்காமல், காவிரி விவகாரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு நடுநிலையோடு உச்சநீதிமன்றம் அளித்திருக்கிற உத்தரவை அடிப்படையாக கொண்டு மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும்.
தமிழக விவசாயிகள் எதிர்பார்த்தது நடுவர் மன்றம் அளித்த 205 டிஎம்சி தண்ணீரை விட கூடுதலாக 50 டிஎம்சி தண்ணீராவது கிடைக்கும் என எதிர்பார்த்தோம். காரணம் 1934 முதல் 1974 வரை 40 ஆண்டுகள் சராசரியாக தமிழகத்துக்கு கிடைத்த தண்ணீரின் அளவு 368 டிஎம்சி ஆகும். அதைவிட குறைவாக இப்போது அளித்திருப்பது எங்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.
கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பும் அரசியல் கலந்து இருக்கிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது." என்றார்.
காவிரி கடைமடை பகுதியில் இருக்கும் கீழ்வேளூர் தனபாலன் கூறுகையில்," உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை தந்திருந்தாலும் காவிரி நீரை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்கிற தீர்ப்பு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. காவிரி தண்ணீர் கர்நாடகத்திற்கே சொந்தம். இந்த தீர்ப்பை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையென்றால் வெற்று காகிதத்தில் எழுதப்பட்ட தீர்ப்பாக அமைந்துவிடும். காவிரி நீரை பெற்றுத்தர மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்."என்றார்.
"கர்நாடகாவில் இருந்து வரும் தண்ணீர் ஒக்கேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து ஈரோட்டில் 17,320 ஏக்கர் நிலங்களும், நாமக்கலில் 11,327 ஏக்கரும், கரூர் மாவட்டத்தில் 22.500 ஏக்கர் நிலமும், திருச்சியில் 2 லட்சத்து 4000 ஏக்கர் நிலமும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 28000 ஏக்கர் நிலங்களும், தஞ்சை மாவட்டத்தில் 4 லட்சம் ஏக்கரும், திருவாரூரில் 4 லட்சம் ஏக்கரும், கடைமடைப்பகுதியான நாகை மாவட்டத்தில் 3.50000 ஏக்கரும் அரியலூர் மாவட்டத்தில் 24000 கடலூர் 1.லட்சத்து 10000 ஏக்கர் நிலங்களும் சாகுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து கர்நாடகத்தின் வஞ்சனையால் சாகுபடி நிலங்களின் அளவு சுறுங்கியபடியே காணப்பட்டது, இந்த தீர்ப்பினால் மேலும் 1.50000 ஏக்கர் நிலங்கள் சுருங்கும்.
தமிழகம் கேட்டது 264 டிஎம்சி உச்சநீதிமன்றம் கொடுத்திருப்பதோ 177.25 டிஎம்சி இது 2007ம் ஆண்டில் நடுவர் மன்றம் வழங்கிய 192 டிஎம்சியை, விட 14.75 டி,எம்,சி தண்ணீரை குறைத்துள்ளது. அதோடு அந்த தண்ணீரை வளர்ந்துவரும் நகரமான பெங்களூருக்கு வழங்குவதாக கூறியிருப்பது தமிழகத்தின் மீது மத்திய அரசும், நீதீமன்றங்களும் வைத்திருக்கும் நம்பிக்கை வெளிச்சமிடுகிறது. இது நமது மாநில அரசின் முடக்குவாததனத்தால் வந்தது." என்கிறார் காவிரி விவசாய சங்க தலைவர்களுல் ஒருவரான பாலகுரு.
- க.செல்வகுமார்
Published on 16/02/2018 | Edited on 16/02/2018