Skip to main content

காவிரி மேற்பார்வை ஆணையம் என்பது மத்திய அரசு தமிழகத்திற்கு செய்த மிகப்பெரிய துரோகம் - கே.பாலகிருஷ்ணன் 

Published on 24/03/2018 | Edited on 24/03/2018
bala

 

காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற அதிகாரமில்லாத அமைப்பை உருவாக்கி தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துள்ளது மத்திய அரசு. துரோகத்திற்கு துணைபோன எடப்பாடி அரசு வரலாற்றுத் தவறைச் செய்துள்ளது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். புதுக்கோட்டையில் சனிக்கிழமையன்று அவர் செய்தியாளர்களிடம் பேசியது:

 

காவிரி மேலாண்மை வாரியத்திற்குப் பதிலாக அதிகாரமில்லாத அமைப்பை உருவாக்கி எதிர்பார்த்த மாதிரியே மத்திய அரசு தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்துள்ளது. இது வன்மையான கண்டனத்திற்கு உரியது. காவரி மேலாண்மை வாரியம் என்பது காவிரி நீரை பங்கிட்டுக்கொடுக்கும் உரிமையை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் அமைப்பு. நடுவர் மன்றம் உத்தரவுப்படி நான்கு மாநிலங்களுக்குமான தண்ணீரை அதுவே வினியோகம் செய்யும். ஆனால் மத்திய அரசு அமைத்துள்ள மேற்பார்வை ஆணையத்திற்கு அந்த அதிகாரம் இல்லை.  

 

நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதமே மாநிலங்களுக்கு இடையில் எவ்வளவு தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பானது மட்டுமே. நிலத்தடி நீரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பது மட்டுமே தீர்ப்பின் இறுதித்தீர்ப்பில் சாரம்சம். மற்றபடி நடுவர் மற்றம் வரையறுத்துள்ள காவிரி மேலாண்மை வாரியம் அப்படிபே அமுலாகும் என்றே தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழக பாஜக தலைவர் தமிழிசை மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று கூறவில்லை என திசைதிருப்புகிறார். அவர் வழக்கை முழுமையாகப் படிக்க வேண்டும். படித்துவிட்டு எங்களோடு நேரடியாக விவாத்திற்கு வரட்டும். பதில் சொல்லத் தயாராக இருக்கிறோம்.

 

பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் அரசியல் ரீதியாக எந்த லாபமும் வரப்போதில்லை. கர்நாடத்திற்கு சாதகமாக நடந்துகொண்டால் அங்கு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பலனடையலாம் என்பதுதான் மோடி அரசின் கணக்கு. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு அது அனைத்துப் பகுதி மக்களுக்குமான அரசாக இருக்க வேண்டும். மோடி அரசு அப்பட்டமான வாக்கு அரசியல் செய்கிறது. காவிரி மேற்பார்வை ஆணையம் என்பது முழுக்க முழுக்க கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்தே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

மத்திய அரசை எதிர்த்து ஆக்கப்பூர்வமான எந்தப் போராட்டத்தையும் எடப்பாடி அரசு நடத்தவில்லை.  நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் மேலாண்மை வாரியம் உட்பட நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்திய அரசு பதில்சொல்ல வேண்டிய நிலை வரும்.  இந்த சங்கடத்தைத் தவிர்பதற்காகவே நாட்டில் இதரக் கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தையும் அவையில் கொண்டுவரவிடாமல் நாடாளுமன்றத்தை கடந்த 15 நாட்களாக அதிமுக முடக்கி வருகிறது. மோடி அரசு எழுதிக்கொடுத்த நாடகத்தை அப்படியே எடப்பாடி அரசு நிறைவேற்றி வருகிறது. தமிழத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் ஒருங்கிணைந்து பிரதமரை சந்திக்க வேண்டும். சந்திக்க மறுத்தால் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட வேண்டும். ஆனால், மத்திய அரசின் பினாமியாகச் செயல்படும் எடப்பாடி அரசு இதைச் செய்யும் என்ற நம்பிக்கை இல்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னெடுப்பில் டெல்டா மாவட்டங்களில் வருகின்ற ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் ரயில் நிறுத்தப் போராட்டத்திற்கு திட்டமிட்டு வருகிறோம். மத்திய அரசு இப்படி ஒரு அதிகாரமில்லாத அமைப்பை உருவாக்கியுள்ள நிலையில் உடனடியாக தமிகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் சந்தித்து போராட்டத்தை மிகத் தீவிரமாக நடத்துவதற்குத் திட்டமிடுவோம். இந்த நேரத்தில் தமிழக மக்கள் சும்மா இருந்தால் வரும் தலைமுறையினரின் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்.

 

அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களுக்கு பல மடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. அவரிகளிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்து அரசின் சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்த்து அறநிலையத்துறையில் வைப்பு நிதியாக சேர்க்க வேண்டும். அப்படி செய்தால் அங்கு குடியிருப்பவர்களும் பாதுகாக்கப்படுவர். கோவிலுக்கும் நிதி சேரும்.

 

எடப்பாடி அரசின் ஓராண்டு அரசு என்பது கானல் நீரைப்போன்றது. எஸ்.சி, எஸ்டி பிரிவு மாணவர்களின் கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டது. ஒரு கோடியே 3 லட்சம் இலவச ரேசன் அரிசியை பறிக்கும் திட்டம் உள்ளிட்ட தமிழக நலன்களை மத்திய அரசு பறிக்கும் நடவடிக்கைகளுக்கு எடப்பாடி அரசு வாய்மூடி மவுனியாகவே இருக்கிறது. மொத்ததில் இந்த ஆட்சி என்பது தமிழகத்திற்கு ஒரு விபத்தாகவே அமைந்துவிட்டது. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தனதுபேட்டியில் குறிப்பிட்டார். 

 

பேட்டியின் போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சார்ந்த செய்திகள்