Skip to main content

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வழக்கறிஞர்கள் ஆணையர்கள் ஆய்வுக்கு உத்தரவு

Published on 01/09/2017 | Edited on 01/09/2017
காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வழக்கறிஞர்கள் ஆணையர்கள் ஆய்வுக்கு உத்தரவு

நெல்லை ஏ.சுடலைகண்ணு என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு அடிப்படையில் "உயர்நீதிமன்றம்  உத்தரவு" கீழ்கண்ட உத்தரவு அளித்துள்ளது.  

தஞ்சாவூர், திருச்சி, கரூர் மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடத்தில் 19 இடங்களில் தமிழக அரசு மணல் குவாரிகளை நடத்தி வருகிறது. விதிப்படி ஒரு மீட்டர் ஆழத்திலும், 25 ஹெக்டேர் பரப்பளவிலும் மணல் அள்ள வேண்டும். இந்த விதியை மீறி 6 மீட்டர் ஆழத்திலும், 75 ஹெக்டேர் பரப்பளவிலும் மணல் அள்ளி வருகின்றனர். ராட்சத இயந்திரங்களை பயன்படுத்தி இரவு, பகலாக மணல் அள்ளி வருவதால் காவிரியும், கொள்ளிடமும் பல அடி ஆழத்துக்கு கீழே சென்றுவிட்டது. 

மேட்டூர் அணையில் இருந்து கட்டளைக்கு 4 நாட்களிலும், கல்லணைக்கு 5,6 நாட்களிலும் தண்ணீர் வந்து சேரும். தற்போது மணல் குவாரிகளால் கட்டளைக்கு தண்ணீர் வந்து சேர்வதற்கு 10 நாட்களும், கல்லணைக்கு20 நாட்களும் ஆகிறது. நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்துக்கு சென்று விட்டது. கிணறுகளில் 20 அடியில் இருந்த தண்ணீர், தற்போது 80 அடிக்கு கீழே சென்று விட்டது.

       தமிழகத்தில் 2003-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை மணல் குவாரி மூலம் அரசுக்கு ரூ.1028.40 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதே ஆண்டில் டாஸ்மாக் மது விற்பனையில் ரூ.86,983 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அரசு மணல் விற்பனையில் நேரடியாக ஈடுபட்டால் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி முதல் ரூ.50ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும்.  மணல் விற்பனையில் இடைத்தரகர்களின் தலையீடு அதிகரித்து பெரும் முறைகேடு நடைபெறுகிறது. 

தமிழகம் முழுவதும் மணல் விற்பனையை முறைப்படுத்த மணல் குவாரிகளை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, நீதிபதி கே.பத்மநாபன் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. ஆனால், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தராததால் நீதிபதி ராஜினாமா செய்தார். அதன் பிறகு புதிய குழு அமைக்கப்படவில்லை. 

எனவே மாநில அளவில் மணல் குவாரிகளை கண்காணிக்க சுய அதிகாரம் கொண்ட நிபுணர் குழு அமைக்கவும், காவிரி, கொள்ளிடம் நதியில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மணல் அள்ள தடை விதித்து, தற்போது செயல்பட்டு வரும் மணல் குவாரியை மூடவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவுடன் கொள்ளிடத்தில் கிளியநல்லூர், கரியமாணிக்கம் பகுதிகளிலும், காவிரியில் திருவளர்ச்சோலையிலும் மணல் குவாரிக்கு தடை விதிக்கக் கோரி தாக்கலான மனுக்களும் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. 

விசாரணைக்குப்பின் நீதிபதி அளித்த உத்தரவு :

  வழக்கறிஞர் ஆணையர்களாக ஆர்.அழகுமணி, பி.சரவணன் ஆகியோர் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்கள் தாமிரபரணி மணல் குவாரி ஆய்வுப் பணியில் ஈடுபட்ட பேராசிரியர். ரவிச்சந்திரன் ஆகியோருடன்டன் சேர்ந்து காவிரி, கொள்ளிடம் மணல் குவாரிகளை ஆய்வு செய்து செப்.11-ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

ஜெ.டி.ஆர்.

சார்ந்த செய்திகள்