சென்னையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஜெ.கே.புதியவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது முன்னாள் கார் டிரைவர் பாஸ்கர் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார். இந்நிலையில் இன்று பாஸ்கர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக ரயில்வே ஏ.ஐ.ஓ.பி.சி (அனைத்து இந்திய பிற பிற்படுத்தப்பட்டோர் பிரிவு) தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தவர் புதியவன். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ந்தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தொழிற்சங்க மோதல், பணம் கொடுக்கல் வாங்கல் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என அப்போது பேசப்பட்டது. இந்த கொலையில் அவரது முன்னாள் கார் ஓட்டுனர் பாஸ்கர் தான் மெயின் குற்றவாளி என கருதியது. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் இருந்து வெளியே வந்த பாஸ்கரை, ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்திருக்கிறது. வில்லிவாக்கம் பலராமன் தெருவில் உள்ள பாஸ்கர் வீட்டிற்கு, நேற்றிரவு சென்ற கூலிப்படை கும்பல், அவரை கண்டந்துண்டமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியுள்ளது.
ஜே.கே.புதியவனின் கொலைக்கு பழி வாங்கவே, அவரது மைத்துனர் சுபாஷ் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.