சென்னையைச் சேர்ந்த கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி டெபாசிட் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வாடகை கார் ஒட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்தான் இவரது வங்கி கணக்கில் கடந்த 9 ஆம் தேதி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியிலிருந்து ரூ. 9 ஆயிரம் கோடி டெப்பாசிட் ஆகியிருப்பதாக குறுஞ்செய்தி ஒன்று ராஜ்குமாரின் கைப்பேசிக்கு வந்துள்ளது.
தனது வங்கிக் கணக்கில் ரூ.105 மட்டுமே இருந்த நிலையில் ரூ. 9 ஆயிரம் கோடி டெப்பாசிட் குறுஞ்செய்தி ஒரு ஏமாற்று வேலை என்று கருதியிருக்கிறார். பின்னர் சந்தேகமடைந்த ராஜ்குமார் இருக்கும் பணத்தை நண்பருக்குப் பகிர்ந்து பார்த்தால் உண்மை தெரிய வரும் என்று தனது நண்பருக்கு ரூ.21, ஆயிரத்தைப் பகிர்ந்துள்ளார். அப்போதுதான் தனது வங்கிக் கணக்கிற்கு ரூ. 9 ஆயிரம் கோடி பணம் வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜ்குமாரைத் தொடர்புகொண்ட தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் நிர்வாகம் தவறுதலாக உங்களுக்குப் பணம் டெப்பாசிட் ஆகியுள்ளது, அதனால் பணத்தை யாருக்கும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு பின் பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இதையடுத்து வங்கியிலிருந்துதான் தவறுதலாகப் பணம் அனுப்பப்பட்டதால், நீங்கள் நண்பருக்குப் பகிர்ந்த ரூ.21 ஆயிரம் பணத்தைத் திருப்பி தர வேண்டாம் என ராஜ்குமாருக்கு வங்கி நிர்வாகம் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, வங்கி தரப்பில் போலீஸிடம் சென்றுள்ளதாகவும், வங்கி நிர்வாகிகள் ராஜ்குமாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.