Skip to main content

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை 

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

Captured Tamil Nadu fishermen released

 

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்திருக்கிறது இலங்கையில் உள்ள மன்னார் நீதிமன்றம். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்று சென்னை வந்தனர்.

 

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 14 ஆம் தேதி 15 மீனவர்கள் மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குள் சென்றார்கள். இலங்கை கடல் எல்லைக்குள் இவர்கள் புகுந்து விட்டதாகச் சொல்லி, 15 தமிழக மீனவர்களையும் சுற்றி வளைத்து கைது செய்தனர் இலங்கை கடற்படையினர். அவர்களுடைய இரண்டு விசைப் படகுகளையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கைக்கு அழைத்துச் சென்று தங்கள் அலுவலகத்தில் அடைத்து வைத்தனர்.

 

கைது செய்யப்பட்ட 15 மீனவர்களும் இந்திய கடல் எல்லையில்தான் மீன் பிடித்தனர் என்றும், இலங்கை கடல் எல்லைக்குள் அவர்கள் செல்லவில்லை என்றும், இந்திய எல்லைக்குள் அத்துமீறி இலங்கை கடற்படையினர்தான் நுழைந்தனர் என்றும் தமிழக மீனவர்கள் தகவல் அனுப்பினர். இந்தத் தகவலை தமிழக அரசின் கவனத்துக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் கொண்டு சென்றனர். தமிழக அரசும் இதனை மத்திய அரசுக்கு தெரிவித்தது.

 

இதனையடுத்து இந்திய அரசு மேற்கொண்ட முயற்சியில் 15 தமிழக மீனவர்களையும் விடுவித்தது இலங்கை அரசு. விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேரும் இலங்கையிலிருந்து இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்கள் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்கின்றனர். 

 

சென்னை வந்த மீனவர்கள், “எங்களை விடுவிப்பதற்காக முயற்சி எடுத்த மீனவர் சங்கங்களுக்கும், மத்திய - மாநில அரசுகளுக்கும் நன்றி என்று சொல்வதை தவிர வேறு வார்த்தைகள் எங்களிடம் இல்லை” என்றனர் கண்ணீர் மல்க.

 

இதற்கிடையே, கடந்த அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேரையும், அவர்கள் சென்ற 3 விசைப் படகுகளையும் கைது செய்தது இலங்கை கடற்படை. இவர்கள் மீது எல்லை தாண்டுதல், தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல், அனுமதியின்றி மீன் பிடித்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ்  வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது இலங்கை கடற்படை.

 

இந்த வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், தற்போது நிபந்தனைகளுடன் அவர்களை விடுதலை செய்துள்ளது நீதிமன்றம். விடுதலை செய்யப்பட்ட 38 மீனவர்களும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களைத் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது இந்தியத் தூதரகம்.

 

 

சார்ந்த செய்திகள்