Skip to main content

கட்டையன் யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

 Captivation of a Katayan elephant by anesthetic injection

 

சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைக்கிராமத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய கட்டையன் என்கிற காட்டு யானை கடந்த ஒரு வருடமாக உணவுக்காக பூதிக்காடு, செங்காடு மூலக்கடம்பூர் தொண்டூர் கடம்பூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட வனத்தையொட்டிய விவசாய நிலங்களில் புகுந்து சோளம், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்தி வந்தது. மேலும், பயிர்களை நாசம் செய்து வரும் கட்டையன் யானையைப் பிடித்து வேறொரு பகுதியில் விட வேண்டும் எனவும் வனத்துறைக்கு விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கையும் விடுத்து வந்தனர்.

 

இந்நிலையில், கடம்பூர் வனத்துறையினர் யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். 40 வயது மதிக்கத்தக்க காட்டு யானையைப் பிடிக்க மருத்துவக் குழுவும் வரவழைக்கப்பட்டது. அதேபோன்று காட்டு யானையைப் பிடித்து மற்றொரு வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறை சார்பில் ஓசூர் பகுதியிலிருந்து லாரியும் வரவழைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவக் குழு மற்றும் கடம்பூர் வனச்சரக அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினர் இணைந்து யானை செல்லும் வழித் தடங்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். காட்டு யானை சமதளமான விவசாய நிலங்களை ஒட்டி வரும்போது மருத்துவக் குழுவினர் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கத் தயார் நிலையிலிருந்தனர்.

 

இந்நிலையில், ஓசப்பாளையம் அடுத்த பெலுமுகை பகுதி விளைநிலங்களில், கட்டையன் யானை சுற்றித் திரிவதாக வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து வனத்துறை மற்றும்  கால்நடை மருத்துவக் குழுவினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வன மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர், கட்டையன் யானைக்கு 4 முறை மயக்க ஊசி செலுத்தினர். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு யானை மயக்கமடைந்த நிலையில் கிரேன் மூலம் கயிறு கட்டப்பட்ட ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பவானிசாகர் அடுத்த தெங்குமரஹாடா வனப்பகுதியில் மங்களப்பட்டி எனும் அடர்ந்த வனப்பகுதியில் கட்டையன் யானை விடப்பட்டது. தற்போது கட்டையன் யானை நலமுடன் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் மலைப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்