Skip to main content

மறக்க முடியுமா கலைஞரை? திரைக்கலைஞர்கள் நினைவலைகள்

Published on 26/08/2018 | Edited on 27/08/2018

 

k

 

கலைஞரின் புகழுக்கு வணக்கம் தெரிவிக்கும் வகையில் திரையுலக பிரபலங்கள் பங்கேற்கும் "மறக்க முடியுமா கலைஞரை" நிகழ்ச்சி கோவையில் நேற்று நடைபெற்றது. நடிகர்கள் சிவக்குமார், சத்தியராஜ், பிரகாஷ்ராஜ், ராதாரவி, பிரபு, நாசர், ராஜேஷ், மயில்சாமி, ராதிகா, பார்த்திபன், மோகன்பாபு  ஆகியோர் பங்கேற்று கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

 

கோவை பீளமேடு தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், தயாநிதிமாறன், கனிமொழி, ஆ.ராசா, ஏ.வா.வேலு திமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.


நிகழ்வின் தொடக்கமாக மேடையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட கலைஞரின் திருஉருவ படத்திற்கு திரைத்துரையினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஒவ்வொரு நடிகர்களும் தங்களுடன் கலைஞர் எவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்பதை பற்றியும் ஒரு சிலர் கலைஞரின் நினைவலைகளையும் தாண்டி அரசியல் பற்றியும் பேசினர்.

நடிகர் ராதாரவி:  28-ம் தேதி இந்த இயக்கத்திற்கு தலைவராக போகவுள்ள,முதல்வராக போகவுள்ள ஸ்டாலினுக்கு வணக்கம்.

 சாதாரணமான மக்களின் நிலையை அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று பயிற்சி அளித்து தரம் இருந்து பெற்ற தலைவர் ஸ்டாலினை செயல் தலைவராக அடையாளம் காட்டினார் கலைஞர். அவருடைய கனவை நிறைவேற்ற வேண்டும். உங்களுக்காக உழைத்தவர்களை, உழைப்பவர்களை பொதுமக்கள் மறந்து விடாதீர்கள். இந்த அமைப்பு பிடிக்கவில்லை என்றால் விலகிக்கொள்வது நல்லது

.
நடிகர் ராஜேஷ்: 1969ல் அறிஞர் அண்ணா உயிரிழந்தபோது கட்சி நிலைக்காது என்பதை மாற்றியமைத்தார். எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆகியோரின் பல எதிர்ப்புகளை தகர்த்தெழுந்தவர்.மரண ஊர்வலத்தில் வாழ்க்கைக்கான அர்த்தம் தெரியும்.கலைஞர் சிறந்த முதல்வராக இருப்பார் என எம்.ஜி.ஆர். நம்பினார். அறிஞர் அண்ணா உயிரிழந்த பிறகு முதல்வர் யார் என்பதற்கு கலைஞர் கருணாநிதி தான் என்பதை எம்.ஜி.ஆர். ஆதரவு அளித்தார்.  மாற்று கட்சியினரிடம் நல்ல பெயரை பெற்றவர்.

 

k


நடிகர் மோகன் பாபு: திருப்பதி சித்தூர் மாவட்டத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து,சினிமாவில் இணைவதற்கு சென்னைக்கு படிக்க வந்தேன்.

 தமிழ் தாய் எனக்கு பால் கொடுத்தது.  கலைஞர்  சிறந்த மனிதர்.  தமிழ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.  கலைஞர் ஆட்சியில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாக இருந்தது.  தமிழின் பாதுகாவலர் கலைஞர்.  அவருடைய வாழ்க்கை பரிமாணங்கள் நமக்கு வரலாறு.  பராசக்தி, மலைக்கள்ளன், மனோகரா போன்ற படங்கள் வரலாற்று படங்கள். அவருடைய வசனத்தில் நடிக்க எனக்கு அதிர்ஷ்டம் இல்லை.

நடிகை ராதிகா சரத்குமார்:  விரைவில் திமுகவிற்கு தலைவராகவுள்ள ஸ்டாலினுக்கு வணக்கம். கலைஞர் இல்லாத அரசியல், அறிவாலயம், கலை உலகம், தமிழகம், கோபாலபுரம்,கழகம் அனாதையாக உள்ளது.
 

நடிகர் பிரபு: நடிகர் சிவாஜி கணேசன் சிலை நிறுவுவதற்கு காரணம் கலைஞர். அந்த சிலை தொடர்ந்து இருப்பதை வருங்காலத்தில் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஸ்டாலினை குறிப்பிட்டு பேசினார். தமிழினம்,தமிழ் உணர்வு இருக்கும் வரை கலைஞரை மறக்க முடியாது.

 

நடிகர் பார்த்திபன்:  தமிழில் நான் கிறுக்கல்கள்.. கலைஞர் திருக்குறள். மரணம் துயரமானது, கலைஞரின் மரணம் உயரமானது.  தமிழ் எனக்கு உயிர் போன்றது. கலைஞர் மறைவு தமிழுக்கே உயிர் போனது. ஈடு செய்ய முடியாதது. மஞ்சள் நிற துண்டை கலைஞர் அணிந்திருந்ததை சுட்டிக்காட்டி அணிவித்தார்.

இதை நான் அரசியலுக்காக செய்யவில்லை.  பிற மொழி நடிகர் (மோகன் பாபு) எழுதி வைத்து கலைஞருக்காக பேசுவதே கலைஞருடைய வெற்றி. சற்று ஓய்விற்காக மெரினா சென்றவர்,நீண்ட ஓய்விற்காக தற்போது சென்றுள்ளார்.

 

t

 

நடிகர் பிரகாஷ்ராஜ் : தென்னிந்திய அரசியல் தலைநகராக சென்னை இருக்கிறது. தலைவர் இல்லை. கலைஞரை பிரதிபலிக்ககூடிய கதாப்பாத்திரத்தில் நடிக்க மணிரத்தினத்தின் இருவர் படம் வாய்ப்பு வந்தது. சவாலான பாத்திரம். தமிழ் கற்றுக்கொள்ள துவங்கியது அங்கேதான். சுயமரியாதை, உரிமை, பண்பாடு ஆகியவை கலைஞர் மூலம் தமிழை உணர்ந்து கொண்டேன். கலைஞரின் இலக்கிய தமிழ் தென்றலாகவும், அரசியல் தமிழ் புயலாகவும் இருந்தது.

தமிழக விருது அரசியல் விருது என ஆதங்கத்தில் பேட்டி கொடுத்ததால் கலைஞர் வருத்தப்பட்டார். சில காலங்கள் கழித்து அவர் முன்னால் அவருடைய வசனத்தை பேசி நடித்தபோது, சிவாஜி இல்லை இப்போது பிரகாஷ்ராஜ் உள்ளார் என கலைஞர் கூறும்போது பல விருதுகள் கிடைத்த மகிழ்ச்சியை அடைந்தேன். தேசிய நுழைவுத்தேர்வு எனும்நவீன தீண்டாமையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தேசிய பொறியியல் நுழைவுத்தேர்வை தமிழகத்தில் தடுத்தவர் கலைஞர்.

 


இயக்குனர் பாரதிராஜா: பகுத்தறிவு பகலவன் மறைந்து விட்டது. அரசியல், கலைத்துறை, இலக்கியம் சார்ந்த துறைகளை சார்ந்தவர்கள் நொடிந்து போய்யுள்ளனர். இந்த சூரியன் மீண்டும் உதிக்கும் என நம்பிக்கை இருக்கிறது என ஸ்டாலினை சுட்டிக்காட்டி பேசினார். தமிழும், கலைஞரும் இரண்டரை கலந்த அடையாளம். தமிழ் திரைப்பட வரையறைகளை உடைத்தெரிந்து வந்திருக்கிறாய் என கலைஞர் பாராட்டியது மறக்க முடியாதது. மனிதாபிமான சிறந்த மனிதர் கலைஞர். அரசியலில் வித்தகர் இருப்பினும், கலைஞரை தவிர்த்து விட்டு தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடியது ஏன் என கலைஞர்கள் ஏன் கேட்கவில்லை பாரதிராஜா,வைரமுத்து உட்பட.

 

k

 

நடிகர் சத்யராஜ் : ஸ்டாலின் 3 நாட்களுக்கு பிறகு தலைவர், 3 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர்.: ஹாலிவுட் கலைஞர்களை எடுத்துக்காட்டாக, உதாரணமாக சொல்லி வந்த நிலையில், மர்லின் மன்றோ ஹாலிவுட்டின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என சொன்னவர் கலைஞர். தமிழர்களை எங்கும் விட்டுக்கொடுக்காதவர். அவருடைய வசனத்தை பேசாமல் சினிமாவில் யாராலும் வசனம் பேச முடியாது. பெரியார் பாதையில் இருந்து விலக கூடாது என்பதற்காக எனக்கு மோதிரம் போட்டவர் கலைஞர். 

சாதியின் அடிப்படையில், பிறப்பின் அடிப்படையில் தமிழகத்தில் இருந்த பிரிவினைக்கு எதிராக இருக்கும் சுயமரியாதை. பகுத்தறிவு இயக்கம். அதற்கு ஒப்பற்ற தலைவர் கலைஞர். அதற்கு எதிராக உள்ளவர்களை கலைஞரின் கொள்கைகள் அச்சுறுத்தி கொண்டே இருக்கும்.

 

நடிகர் சிவகுமார் : தமிழ் சினிமாவின் அடையாளத்தை பராசக்தி திரைப்படம் மூலம் மாற்றி அமைத்தவர் கலைஞர். தனது கொள்கைகளை சாமர்த்தியமாக உலகத்திற்கு திரைப்பட வசனங்கள் மூலம் கொண்டு சென்றவர் கலைஞர்.அரசியல், கலை, இலக்கியத்தில் அவருடைய இடத்தை யாராலும் அசைக்க முடியாது.


நடிகர் நாசர்:  மெல்ல மெல்ல இந்த மேடை இலக்கிய மேடையாக மாறுவது கலைஞரின் பெருமிதம். தமிழினத்தை கடந்தவர் கலைஞர். சமூகத்தை சாடுகின்ற வரிகள் கொண்டது கலைஞரின் வசனங்கள்.


 

சார்ந்த செய்திகள்