தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் துரித கதியில் செய்து வருகிறது. கரோனா பெருந்தொற்றை கணக்கில் கொண்டு மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், சில நாட்களாக கரோனோ கட்டுபாடுகளுடன் கூடிய அரங்க கூட்டங்களை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. மேலும், பிரச்சார நேரத்தையும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை உயர்த்தியது.
இதற்கிடையே நேர்தல் நடைபெற இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில், தற்போது மாநில தேர்தல் ஆணையம் அனைத்து ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், "தேர்தல் நடைபெறும் தினத்திற்கு 48 மணி நேரம் முன்பே அனைத்து விதமான பிரச்சாரத்தையும் அரசியல் கட்சிகள் முடித்துக்கொள்வதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்" என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி 17ம் தேதி் மாலை 6 மணியோடு அரசியல் கட்சியினர் தங்களின் பிரச்சாரத்தை முடித்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்தல் நடைபெற இருக்கும் 19ம் தேதியும் அதற்கு முந்தைய நாட்களான 17 மற்றும் 18ம் தேதியும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.