Skip to main content

ரயில்வே சுரங்கத்தில் சிக்கிய பேருந்து; பயணிகள் மீட்பு

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
Bus stuck in railway tunnel; Passenger rescue

தமிழகத்தில் கோடை காலம் காரணமாக பரவலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் கன மழை பொழிந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, மார்த்தாண்டம், அருமனை, திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்துள்ளது. அதேபோல் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பொழிந்துள்ளது. நெல்லை, குமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தேசிய பேரிடர் மீட்பு படையின் சார்பில் ஒவ்வொருவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது. தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளது .எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரயில்வே சுரங்கப் பாதைக்கு அடியில் அரசு பேருந்து ஒன்று மழை நீரில் சிக்கிக்கொண்டது. நெல்லையில் ஒரு மணி நேரம் பெய்த கனமழை காரணமாக வள்ளியூரில் இருந்து ராதாபுரம் செல்லக்கூடிய பகுதியில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில் மழைநீர் அதிகப்படியாக தேங்கியது. வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் சென்ற பேருந்து மழைநீரில் சிக்கிக் கொண்டது. உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் படையிர் பேருந்தில் சிக்கிக்கொண்ட 40 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர்.

சார்ந்த செய்திகள்