Skip to main content

மீண்டும் வீடு தேடி வந்த துப்பாக்கி குண்டு... நார்த்தாமலையை தொடர்ந்து அச்சத்தில் நாரணமங்கலம்!

Published on 25/01/2022 | Edited on 25/01/2022

 

perambalur

 

பெரம்பலூர் அருகே வீட்டின் மேற்கூரையை குண்டு ஒன்று துளைத்த நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். வீடு தேடி துப்பாக்கி குண்டு விழுந்த சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பெரம்பலூர் அருகே நாரணமங்கலம் பகுதியை ஒட்டியுள்ள மருதடிஈச்சங்காடு அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ள நிலையில் அங்கு பயிற்சி நடந்தபோது நேற்று, அருகிலுள்ள சுப்பிரமணி என்பவர் வீட்டில் பயங்கர சத்தத்துடன் கல் போன்ற பொருள் விழுவதைப்போல் கூரையின் மீது சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி சென்று பார்த்தபோது, அங்கு துப்பாக்கி குண்டு கிடந்தது கண்டு அதிர்ந்தார். அதனைத் தொடர்ந்து அது துப்பாக்கி சுடும் மையத்தில் இருந்து வந்த குண்டா என சந்தேகமடைந்த அவர் இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் அருகிலுள்ள பாடாலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

 

perambalur

 

பாடாலூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்ததோடு, துப்பாக்கி குண்டை கைப்பற்றி அது தொடர்பாக விசாரணை செய்து வந்தனர். இந்த தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சென்ற நிலையில், காவல் கண்காணிப்பாளர் மணி சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ததோடு, கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டு என்ன வகை, அது எங்கிருந்து வந்தது, பயிற்சிபெறும் மையத்திலிருந்து அவ்வளவு தூரத்திலிருந்து வரும் அளவிற்கு அந்த குண்டுக்கு சக்தி உள்ளதா? என்பது போன்ற கோணங்களில் விசாரணை செய்தார். அவரோடு பெரம்பலூர் கோட்டாட்சியர், ஆலத்தூர் வட்டாட்சியர், அதேபோல் வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டனர்.

 

perambalur

 

perambalur

 

அண்மையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் துப்பாக்கிப் பயிற்சி மையத்திலிருந்து துப்பாக்கி குண்டு குடிசை வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த சிறுவன் மீது பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் போராட்டத்தை அடுத்து நார்த்தாமலை துப்பாக்கிச்சூடு மையம் மூடப்பட்டதாக தமிழக அரசு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நார்த்தாமலை போல் மீண்டும் சிக்கியுள்ளது நாரணமங்கலம். மீண்டும் வீடு தேடி துப்பாக்கி குண்டு வந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்