Skip to main content

அத்துமீறிய பணக்கார சிறுவன்; தந்தையை கைது செய்த போலீஸ்!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
boy father was arrested in a case related to a car accident in Pune

மகாராஷ்டிர மாநிலம், கல்யாணி நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகன் வேதாந்த் அகர்வால். 17 வயதான இவர்.. கடந்த மே 19 ஆம் தேதி மிட் நைட்டில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்திருக்கிறார்.  நேரம் கடந்து செல்ல தலைக்கேறிய மது போதையில், பார்ட்டியை முடித்த சிறுவன் வேதாந்த் அகர்வால்.. அதிகாலை 3 மணியளவில் விலையுயர்ந்த போர்ச்  காரில் வீட்டுக்கு கிளம்பியுள்ளார்.

மது அருந்தியுள்ளோம் என்று தெரிந்தும் காரை ஓட்டிய வேதாந்த் அகர்வால் 200 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் எல்லை மீறி அதிகாலை நேரத்தில் சென்றுள்ளார். அப்போது, கல்யாணி நகர் ஜங்ஷன் பகுதியில் சிறுவன் ஓட்டிய கார் தறிகெட்டு எதிரே சென்ற இருசக்கர வண்டியின் மீது மின்னல் வேகத்தில் மோதியது. அதில், பயணம் செய்த ஐடி ஊழியர்களான அனீஸ் துடியா என்ற ஆணும், அஷ்வினி கோஷா என்ற பெண்ணும் அடுத்தடுத்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆனால், அப்போதும் நிற்காமல் சென்ற அந்த சொகுசு கார் தடுப்புச் சுவரில் மோதி நிற்க.. அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு காரை சுற்றி வளைத்தனர். அதனைத் தொடர்ந்து, சொகுசு காரை குடித்துவிட்டு அதிவேகமாக ஓட்டிவந்த சிறுவன் வேதாந்த் அகர்வாலை பிடித்த பொதுமக்கள், தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து, தகவலறிந்து வந்த எரவாடா போலீசாரிடம் விபத்து ஏற்படுத்திய சிறுவனை பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதனிடையே, விபத்தில் உயிரிழந்த இருவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்படுத்திய சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், போர்ஷே சொகுசு காரில் ஓட்டுநர் இருந்தும், 'நான் தான் காரை ஓட்டுவேன்' என்று கூறி மதுபோதையில் சிறுவன் அதிவேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. மேலும், விபத்தில் சிக்கிய போர்ச் கார் ஆர்டிஓ-வில் பதிவு செயப்படவில்லை என்ற தகவலும் வெளியானது.

இதையடுத்து, சிறார்களுக்கான நீதிமன்றத்தில் விபத்து ஏற்படுத்திய சிறுவன் வேதாந்த் அகர்வால் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. விபத்து ஏற்படுத்திய 15 மணி நேரத்தில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவன் வேதாந்த் அகர்வாலுக்கு நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. காரை ஓட்டி 2 உயிரை பறித்த சிறுவனுக்கு நீதிமன்றம், போக்குவரத்து காவலர்களுடன் 15 நாட்கள் பணியாற்ற வேண்டும், மனநல சிகிச்சை பெற வேண்டும், சாலை விபத்தின் விளைவு மற்றும் அதற்கான தீர்வு என்ற தலைப்பில் 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும், போதை ஒழிப்பு மையத்தில் கவுன்சிலிங் பெற வேண்டும், எதிர்காலத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நிபந்தனைகள் குறிப்பிட்டு ஜாமீன் வழங்கியது.

ஆனால், இதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனம் எழுந்தது. மது போதையில் சொகுசு காரை ஓட்டி இருவர் உயிரிழப்புக்குக் காரணமான சிறுவனுக்கு இவ்வளவு எளிமையாக ஜாமீன் வழங்கலாமா? தொழில் அதிபரின் மகன் என்றால் விதிவிலக்கா? என்றெல்லாம் சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பினர்.  

தொடர்ந்து, விபத்து நடந்த சிசிடிவி காட்சி மற்றும் சிறுவன் பார்ட்டியில் மது அருந்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கடுமையான எதிர்ப்புக்கு பிறகு மதுபோதையில் காரை ஓட்டிய சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், 15 மணி நேரத்தில் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியதற்கு சமூக வலைதளவாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்