உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 467 ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நடைபெற உள்ளது. விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என தர்கா அரங்காவலர் குழு அழைப்பு விடுத்திருந்தது, அதே நேரம் ஆளுநர் ரவி சந்தனக்கூடு நிகழ்விற்கு வந்தால், சட்ட ஒழுங்கு என்கிற பெயரில் வியாபாரம் பாதிக்கும் என வர்த்தக சங்கத்தினர் மாவட்ட எஸ்,பியிடம் புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையில், நாகூர் தர்காவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று வருகை புரிந்தார். கவர்னர் வருகையால் அலங்கார வாசல் முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சுற்றிலுள்ள ஒருசில கடைகள் அடைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதனை தொடர்ந்து தர்கா வந்தடைந்த கவர்னருக்கு பாரம்பரிய முறைப்படி வழக்கமாக தர்கா மணி மேடையில் அமர்ந்திருந்தபடி நகரா மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆளுநர் ஆர்.என்.ரவியை அலங்கார வாசலில் நாகூர் தர்ஹா தலைமை அறங்காவலர் ஹாஜி உசேன் சாஹிப், ஆலோசனை குழு உறுப்பினர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப், மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், நாகை எஸ்பி ஹர்ஷிங் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தர்காவினுள் சென்ற ஆளுநர் பெரிய ஆண்டவர் சமாதியில் இஸ்லாமியர்களோடு சிறப்பு துவா ஓதப்பட்ட நிகழ்வில் பங்கேற்றார்.
பின்னர் தர்கா வாசலில் வைக்கப்பட்டுள்ள குறிப்பேட்டில், ''467 வது கந்தூரி திருவிழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைவரது நல்வாழ்வுக்கும் எனது பிரார்த்தனைகள். புனிதரின் ஆசீர்வாதங்களைப் பெற்றதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பாரதத்தின் கலாச்சாரத்தையும், உயரிய நெறிமுறைகளையும் பழமை வாய்ந்த இந்த தர்கா பிரதிபலிக்கிறது'' அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்று எழுதினார்.
முன்னதாக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்ட எல்லையில் கீழ்வேளூர் புறவழிச்சாலையில் காங்கிரஸ், விசிக கம்யூனிஸ்ட் திக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஆளுநர் வருகைக்கு முன்பாகவே காவல்துறையினர் கைது செய்தனர். அரசியல் கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாகூர் தர்காவில் ஆளுநர் தரிசனம் மேற்கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.