குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள், டெல்லியில் வன்முறை என திரும்பிய நேரத்தில் அச்சட்ட மசோதாவிற்கு ஆதரவாக பா.ஜ.க.வினர் திரண்டு வந்து பிப் 28 இன்று மாலை நெல்லையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் பேரணி நடத்தினர். பேரணியில் எதிர்க்கட்சிகளை கண்டனம் செய்து கோஷமிட்டனர். பின்னர் நெல்லை மாவட்ட பா.ஜ.க. செயலர் மகாராஜன், இந்து முன்னணியின் குற்றலாநாதன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நெல்லை கலெக்டர் ஷில்பாவிடம் மனுக் கொடுத்தனர்.
இந்த பேரணி முடிவில் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், "சி.ஏ.ஏ. பற்றி மக்களுக்குத் தவறான தகவல் போவதைக் கண்டிக்க வேண்டும். அதுதான் மனிதன். இல்லை என்றால் மனிதரே அல்ல. இந்த சி.ஏ.ஏ. சட்டத்தைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகளும் அறிந்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். நாட்டைப் பிளக்கமாட்டோம் என்று காந்தியும் நேருவும் தேர்தலின் போது சொன்னார்கள். 1585 இடங்களில் தேர்தல். நாடு பிளக்கப்பட வேண்டுமா வேண்டாமா? இதில் காங்கிரஸ் 725 இடங்களில் வெற்றி. அதில் முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் 56 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டு 26 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அன்று காங்கிரஸை மதிக்கவில்லை. அன்று சென்னை ராஜதானி, ஆந்திரப் பகுதி கேரளாவைக் கொண்டதாக இருந்தது. அந்தப் பகுதிகளில் காங்கிரஸ் 159ல் தான் வெற்றி பெற்றது. நாட்டைப் பிளவு படுத்தக் கூடாது என்றவர்கள், காந்தி, நேரு 1947ல் நாட்டைப் பிரித்துக் கொடுத்தார்கள். ஆனால் அனைத்து மக்களும் நாடு பிரிக்கப்படக் கூடாது என்று நினைத்தார்கள். அங்கிருக்கும் மக்கள் புறக்கணிக்கப்பட்டால் அவர்களுக்கு இங்கே இடம் கொடுக்க வேண்டும் என்று அம்பேத்கர் சொன்னார்.
சொந்த நாட்டு மக்களை எதிரிகளாக ஆக்கினார்கள். நாடு பிளக்கப்பட்ட போது பாகிஸ்தானிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் துரத்தப்பட்டார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. நிர்க்கதியாய் வந்தார்கள். அப்போது கூட, இங்கு எந்த மக்களையும் புறக்கணிக்கவில்லை. நம் மக்கள் எடுத்த முடிவு தான் நடந்தது. நடந்து விட்டது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம் என்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று நாங்களும் சொல்கிறோம். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதைத்தான் மோடியும் சொல்கிறார்கள். முஸ்லிம்களுக்குக் குடியுரிமை இல்லை, கூடாது என்று நாங்கள் சொல்ல வில்லை.
நாடு பிளக்கப்பட்ட போதே மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. வன்முறையில் அரசு அதிகாரிகள் 2 பேர் கொல்லப்பட்டார்கள். அதை யாராவது கேட்டார்களா? ஏனென்றால் 15 சதவிகித முஸ்லிம் வாக்குகள் அவர்களுக்குத் தேவை. தி.மு.க.வும் காங்கிரஸூம் அதைத்தான் நினைக்கிறது. ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்ற எண்ணம். தி.மு.க.வையும் காங்கிரசையும் நம்பி நீங்கள் களத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். ஆனால் 85 சதவிகித வாக்குகள் ஒன்று சேர்ந்து விட்டால் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. ஒரு தெரு இருந்தால் அது அரசுக்குச் சொந்தம். அங்கு யாரும் இருக்கலாம். எவருக்கும் பட்டா போட்டுக் கொடுக்கவில்லை. கொடுக்கப்பட்ட உரிமையைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். டெல்லியில் காங்கிரஸூக்குத் தேவையானவைகள் கிடைத்துவிட்டது. தி.மு.க. அடுத்த ஆண்டு தேர்தலை மனதில் வைத்து அரசியல் செய்கிறது. இது யாருக்கும் எதிரான சட்டமல்ல. இந்தியாவின் ஆன்மாவை உறுதிப்படுத்தும் சட்டம்" என தெரிவித்தார்.