Skip to main content

முழுக் கொள்ளளவை நெருங்கியது பவானிசாகர் அணை!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

Bhavani Sagar -Dam- is close- to full- capacity

 

கேரள மாநிலத்தையொட்டிய மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியுள்ளது. இதனால் பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த உபரி நீர் பவானி ஆற்றின் வழியாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வருகிறது. பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளளவு 105 அடியாகும். ஆனால் அக்டோபர் 2 ஆம் தேதி வரை, விதிமுறைப்படி 102 அடி நிறைந்தவுடன் அணையில் இருந்து உபரி நீர் திறக்க வேண்டும். தற்போது நீர்ப்பிடிப்புப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது.

 

இந்த மாதத்திலேயே இருமுறை 100 அடியைத் தொட்டது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், பவானிசாகர் அணை நேற்று 101 அடியை எட்டியது. 11 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 101.38 அடியாக உள்ளது. அணைக்கு 9,994 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 750 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,300 கன அடியும் என மொத்தம் 3,050 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

 

மாலை 6 மணி நிலவரப்ப,டி அணைக்கு நீர்வரத்து ஏழாயிரம் அடியாகவும் அணையின் நீர்மட்டம் 101. 53 அடியாகவும் உள்ளது. அதாவது இன்னும் அரை அடி நீர் தான் மிச்சம். இன்று இரவுக்குள் அணை தனது முழு கொள்ளளவான 102 அடி வரை நிரம்பி விடும். இரவுக்குப் பிறகு நாளை முதல் அணைக்கு வருகிற நீர்வரத்து அப்படியே ஆற்றில் திறக்கப்படும். இந்த தண்ணீர் பவானி கூடுதுறை என்ற பகுதியில் காவிரியில் கலந்து வெள்ளப்பெருக்கெடுத்து ஒட உள்ளது.


எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்படும் என்ற காரணத்தால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டி.என்.பாளையம் அருகே உள்ள பெரிய கொடிவேரி, நஞ்சை, புளியம்பட்டி, அடச பாளையம் மற்றும் அத்தாணி பவானி ஆற்றுக் கரையோரப் பகுதிகளுக்கு உட்பட்ட ஈரோடு மாவட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 


 

சார்ந்த செய்திகள்