Skip to main content

பங்காரு அடிகளார் மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

Bangaru passedaway; Political celebrities mourn

 

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்து வந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி தியான பீடம் ஒன்றை உருவாக்கி புகழ் பெற்றவர் பங்காரு அடிகளார். வயது 82. இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நடக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்நிலையில், பங்காரு அடிகளார் மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த  த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், “பங்காரு அடிகளார் மறைவு ஆன்மீகத்துக்கு பெரும் இழப்பு” எனத் தனது இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

 

அதேபோல், அமமுக கட்சியின் டி.டி.வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவு செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆன்மீகவாதிகளில் தனக்கென தனி இடத்தை வைத்திருந்தவர் பங்காரு அடிகளார். அவரை இழந்து வாடும் உறவினர்கள், பக்தர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பங்காரு அடிகளார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “பங்காரு அடிகளார் உடல்நலக் குறைவால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கருவறைக்குள் பெண்கள் சென்று பூஜை செய்யலாம் என்ற முறையை உருவாக்கி புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். சித்தர் பீடம் மூலம் மருத்துவம், கல்வி நிறுவனங்களைத் தொடங்கி சேவையாற்றி வந்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் பக்தர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல், பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பெண்கள் உட்பட அனைவரும் கருவறை சென்று வழிபாடு நடத்தலாம் என்ற வழக்கத்தை மேல்மருவத்தூர் கோயிலில் கொண்டு வந்து ஆன்மீகத்தை ஜனநாயகப்படுத்திய பெருமை பங்காரு அடிகளாருக்கு உண்டு. பங்காரு அடிகளார் மறைவு ஆன்மீகத்துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பு' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்