சிலைகள் செய்யப்பட்டதின் முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் உற்சவர் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் மோசடி செய்தது தொடர்பாகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை ஜூலை 31-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அறநிலையத்துறை அதிகாரி கவிதா ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது கவிதாவை கைது செய்ததற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய ஐஜி பொன். மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கவிதாவை கைது செய்ததற்கான ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து அறநிலையத்துறை அதிகாரியான கவிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சியில் 30 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கவிதாவுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி 30 நாட்களும் கையெழுத்திட வேண்டும் எனவும் கூறியுள்ளது.