வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் சென்னை உட்பட 27 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நிலைத்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதாகவும், தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக மாறக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடலூரில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 49 மீனவ கிராம மீனவர்களுக்கு இந்த அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலையால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.