Skip to main content

விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் லாக்கப்பில் கொல்லப்பட்டாரா? மார்க்சிஸ்ட் கட்சி சாலைமறியல் போராட்டம்!

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் காவல்துறையை சார்ந்த தனிபிரிவு காவலர் பார்த்திபன் மற்றும் காவலர் ராஜா ஆகியோர் வியாழக்கிழமை காலை பேருந்துநிலையம் அருகேயுள்ள ஸ்டேட் பேங்க் பணம் எடுக்கும் இயந்திரம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்றிருந்தார் என்று அவரை பிடித்து விசாரணைக்கு காட்டுமன்னார் கோவில் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

prison


விசாரணையில் அவர்  காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள உருத்திரசோலை கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மகன் வினோத் (25) என்பது தெரிந்தது. இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களுக்கு உதவி செய்வது போல நடித்து நூதனமான முறையில் மோசடி செய்து பணம் திருடுபவர் என்றும் அவரது வீட்டிலிருந்து 6 ஏடிஎம் கார்டுகள் மற்றும் பல்வேறு பகுதியில் பணம் எடுத்ததற்கான குறிப்புகள் அடங்கிய சீட்டு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக. காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்நிலையில் புதன் இரவு வினோத் அடைக்கப்பட்ட லாக்கப்பில் ஏதோ சத்தம் கேட்க காவலர்கள் ஓடிச்சென்று பார்த்த போது வினோத் தான் கட்டியிருந்த வேட்டியால் அங்குள்ள ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு கிடந்தார். காவலர்கள் அவரை மீட்டு காட்டுமன்னார்கோயில் அரசுமருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது ஏற்கனவே வினோத் உயிரிழந்துள்ளார் என்று தெரியவருகிறது.. பின்னர் காவல் துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

prison

இது குறித்து  தகவலறிந்த வினோத்தின் அப்பா மூர்த்தி, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்  அரசு மருத்துவமனையின் வெளி பகுதியில் திரண்டனர். தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுப்புராயன், அசோகன், கீரைப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன், குமராட்சி ஒன்றிய செயலாளர் மூர்த்தி, வட்டக்குழு உறுப்பினர் காளிதாஸ் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் இறந்துபோன வினோத்தின் உறவினர்கள் காவல்துறையினர் வினோத்தை அடித்து கொலை செய்துவிட்டு உண்மையை மறைக்கிறார்கள் என்றும் சம்பந்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விசாரணைக்கு அழைத்து சென்ற காவலர்கள் பார்திபன் மற்றும் ராஜாவை பணிநீக்கம் செய்து விசாரணை நடத்தவேண்டும்.  இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது..

இதுகுறித்து வினோத்தின் அப்பா மூர்த்தி கூறுகையில் எனது மகனை விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்று அடித்துள்ளனர். அவனை காவல்நிலையம் அழைத்து சென்றது குறித்து எந்த தகவலையும் எங்களுக்கு கூறவில்லை. விசாரணையின் போது உடலின் முக்கியமான இடத்தில் அடிபட்டு இறந்துள்ளார். அதனை மறைக்க இவர்கள் இதுபோன்று நாடகமாடுகிறார்கள். வினோத்தை விசாரணைக்கு அழைத்து சென்ற காவலர்களான பார்த்திபன் மற்றும் ராஜா காவல்நிலையத்தில் வைத்து வினோத்தை அடித்ததை எங்க ஊரில் உள்ளவர்கள் பார்த்துள்ளனர். இது அவர்கள் லாக்கப்பில் செய்த கொலை தான் என்று குற்றம்சாட்டுகிறார் வினோத்தின் அப்பா.

prison


இதனைதொடர்ந்து விழுப்புரம் சரக டிஐஜி. சந்தோஷ்குமார், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் ஆகியோர் காட்டுமன்னார்கோவிலில் முகமிட்டு விசாரணை நடத்தினர். இது குறித்து விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ் குமார் கூறுகையில், வினோத்  நூதன முறையில் ஏடிஎம் மில் பண மோசடி செய்வது வழக்கம். இவர் மீது காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்தில் இரண்டு வழக்குகள் உள்ளன.மேலும் கரூரில் ஒரு வழக்கு உள்ளது. நேற்று மாலை ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் ஜெகதீசனிடம் ஏடிஎம் மில் மோசடி செய்து  ரூ1200 மோசடி செய்துள்ளார்.

இதனையொடுத்து வினோத்தை  காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.  பின்னர் அவர் வீட்டில் இருந்து 6 ஏடிஎம் கார்டு மற்றும் பல்வேறு பகுதிகளில் மோசடி செய்த குறிப்புகள், ரூ 12 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்தனர். தான் திருடன் என தனது கிராமத்தினருக்கு தெரிந்ததால், அவமானம் என மன வேதனையடைந்த வினோத் காவல் நிலையத்தில் உள்ள லாக்கப்பில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடல் பிரேத பிரசோதனைக்காக கடலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. கடலூர்  மாஜிஸ்திரேட் மற்றும்  சார் ஆட்சியர் முன்னிலையில் இரண்டு மருத்துவர்கள் அவரது உடலை பிரேத பிரசோனை செய்ய உள்ளனர். இது வீடியோ ரெக்கார்டிங் மூலம் பதிவு செய்யப்படும்.மேலும் இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் தகவல் கொடுக்கப்படும். அதன் அடிப்படையிலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்