Skip to main content

டெல்லியில் அனுமதி மறுப்பு; திருச்சியில் நூதன போராட்டத்தை அறிவித்த அய்யாக்கண்ணு!

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

ayyakannu new announcement for river based issue and agri product issue 

 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் சார்பில் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்திய பிரியாவிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

 

அந்த மனுவில், "கடந்த 2019 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளான விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை மற்றும் கோதாவரி நதியில் இருந்து உபயோகமில்லாமல் கடலில் கலக்கும் நீரை காவிரியுடன் இணைக்கும் திட்டம் உள்ளிட்ட அவற்றை இன்று வரை செயல்படுத்தாமல் அறிக்கையாக அறிவித்ததோடு நிறுத்தி உள்ளார்.

 

இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் புதிய திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்த அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தொடர்ந்து அவற்றை அனுமதிக்காமல் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் சென்று போராட்டம் நடத்த அனுமதி கோரினோம். ஆனால் காவல்துறை அனுமதி மறுத்ததால் வருகின்ற 12 ஆம் தேதி முதல் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே தொடர்ந்து 30 நாட்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக" தெரிவித்துள்ளார்.

 

மேலும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் பல்வேறு நூதன போராட்டங்களை பின்பற்ற உள்ளதாகவும், மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காவல்துறை அனுமதி கொடுத்தாலும், கொடுக்காமல் போனாலும் கட்டாயம் இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்