Skip to main content

கைதிகளுக்கு செல்போன் சப்ளை செய்த உதவி ஜெயிலர்... 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வசூலித்தது அம்பலம்

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

Assistant jailer who supplied cell phones to prisoners! 20 thousand rupees bribe collected exposed !!

 

சேலத்தில் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வசூலித்துக்கொண்டு கைதிகளுக்கு செல்போன் சப்ளை செய்ததாக உதவி ஜெயிலர் மீது பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது.

 

சேலம் மத்தியச் சிறையில் 800க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறைக்குள் கஞ்சா, செல்போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் நடமாட்டம் குறித்த புகாரின்பேரில் அவ்வப்போது சிறைக்காவலர்கள் திடீர் சோதனை நடத்தப்படுவது வழக்கம். 

 

காவல்துறை கெடுபிடியால் சமீப காலமாக செல்போன் நடமாட்டம் கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு கைதிகளிடம் தாராளமாக செல்போன் புழக்கம் இருப்பதாகவும், சிறைக்குள் இருந்தவாறே வெளியே உள்ள எதிரிகளைத் தீர்த்துக் கட்ட வியூகம் வகுத்துக் கொடுப்பதாகவும் சிறைத்துறை உயரதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

 

இதையடுத்து சேலம் மத்திய சிறையில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அனைத்து அறைகளிலும் சிறைத்துறைக் காவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். 6வது தொகுதிக்கு உட்பட்ட 15வது அறையில் நடத்திய சோதனையின்போது, டியூப் லைட் பட்டிக்குள் ஒரு செல்போன் ஒளித்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்தச் செல்போனை சிறைக்காவலர்கள் கைப்பற்றினர்.

 

அதேபோல 1வது அறையில், துண்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு செல்போனையும் பறிமுதல் செய்தனர். அத்துடன் சார்ஜர் வயரும் கைப்பற்றப்பட்டது. மேலும் சோப்புக்கட்டியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சிம் கார்டையும் கைப்பற்றினர். 

 

விசாரணையில், குண்டர் சட்டத்தில் கைதாகி அடைக்கப்பட்டுள்ள விக்கு என்கிற சண்முகம்(23), கார்த்தி(29), விசாரணைக் கைதி ரவி என்கிற ரவிகுமார்(31) ஆகியோர்தான் சிறைக்குள் இருந்தபடியே செல்போனை ரகசியமாக பயன்படுத்தி வந்திருப்பது தெரிய வந்தது. குண்டாஸ் கைதியான கார்த்தியிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கொலை முயற்சி வழக்கில் கைதாகி, கடந்த 8 மாதங்களாகக் கார்த்தி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 

 

இதே சிறையில் உள்ள கோபி என்ற கைதி கேட்டுக் கொண்டதன்பேரில், வெளியில் இருந்து செல்போனை சிறைக்குள் கடத்தி வந்துள்ளார். இதற்காக, உதவி சிறை அதிகாரி ராகவன் என்பவரிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து, செல்போனை ரகசியமாக சிறைக்குள் கடத்தி வந்துள்ளார். விசாரணை கைதி ரவி, கோபியின் தம்பியிடம் பேசியிருக்கிறார். அதன்பிறகு, உதவிச் சிறை அதிகாரி ராகவனும் கோபியின் தம்பியுடன் பேசியுள்ளார். 

 

இந்தப் பேச்சுவார்த்தை எல்லாம் சுமூகமாக முடிந்த பிறகு, ராகவனிடம் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளது கார்த்தி தரப்பு. இதுகுறித்து கார்த்தி, விசாரணையின்போது எழுத்து மூலமாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் சிறை அதிகாரியே உடந்தையாக இருந்த விவகாரம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

இதையடுத்து ஜெயிலர் ராஜமோகன், அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் சிறையில் செல்போன் பயன்படுத்தியதாக கைதிகள் விக்கு என்கிற சண்முகம், கார்த்தி, ரவி என்கிற ரவிகுமார் ஆகியோர் மீதும், செல்போன் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த உதவி சிறை அதிகாரி ராகவன் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். 

 

பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்