அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது வாணவநல்லூர் கிராமம். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்குத் தேசிய திறனறிவு தேர்வு மத்திய அரசால் நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் வாணவநல்லூர் ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் தேசிய திறனறிவு தேர்வு நடைபெற்றது. இதில் 8 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வு எழுதுவதற்கு முன்பு இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை எனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று மாணவர்களை உற்சாகப்படுத்துவேன் என்று அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதா அறிவித்திருந்தார். இதையடுத்து தேர்வில் மிருணாளினி என்ற எட்டாம் வகுப்பு மாணவி திறனறிவு தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதைக் கண்டு தலைமை ஆசிரியை மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆசிரியை தேர்வின் போது மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வு பெறுவார்கள் என்பதற்காக விமானத்தில் அழைத்துச் செல்வேன் என்று ஒப்புக்குக் கூறியதாக மாணவர்கள் எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் சொன்னதைச் செய்து காட்டுவேன் என்ற அந்த தலைமை ஆசிரியை அமுதா வெற்றி பெற்ற மாணவி மிருநாளினியை பள்ளிச் சீருடையுடன் வாணவ நல்லூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்ல டிக்கெட் வாங்கி மாணவியுடன் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்து சென்று மாணவியை மகிழ்ச்சி அடையச் செய்தார். மாணவி மிருநாளினிக்கு விமானத்தில் சென்றது அளவில்லாத சந்தோஷத்தை ஏற்படுத்தியது. விமான பயணத்திற்கு பிறகு சென்னையில் இருந்து ரயில் மூலம் மாணவியை ஊருக்கு அழைத்து வந்தார் தலைமை ஆசிரியை. ஆசிரியரின் இந்த செயல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.