Skip to main content

கூலிப்படைகள் தலைதூக்குவது ஆபத்தானது! - அரக்கோணம் இரட்டைக் கொலைக்கு கி.வீரமணி கண்டனம்!

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

arakkonam incident dravidar kazhagam leader k veeramani statement

 

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பகையால் அரக்கோணத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "சட்டமன்றத் தேர்தல் முடிந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கொலைகளும், தாக்குதல்களும், வன்முறைகளும் தாண்டவமாடுவது வன்மையான கண்டனத்திற்குரியது.


குறிப்பாக அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோகனூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் அர்ச்சுனன், சூரியா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
எந்த மனக்கசப்பும், மாச்சரியமும் தேர்தலோடு முடிந்து, மற்றபடி சுமூக சூழல் தொடர்வதுதான் நாடு நாகரிகமான பாதையில் நடைபோடுகிறது என்பதற்கான அடையாளம்.


தேர்தல் வன்மத்தோடு ஜாதீய வெறியும் கலந்து - வாழவேண்டிய இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு இருப்பதற்கு எந்தவிதமான சமாதானமும் சொல்லி, எந்தத் தரப்பும் தப்பிக்க முடியாது. இந்தப் படுகொலையின் பின்னணியில் மணற்கொள்ளையும் சம்பந்தப்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.


அரியலூர் மாவட்டம் பொய்யாத நல்லூரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் அன்பழகனும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். திருப்போரூர் தொகுதியில் பெருமாள் ஏரி என்னும் ஊரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்காகப் பாடுபட்ட கதிரவன் என்பவரும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். காட்டுமன்னார்குடி, வானூர், கிருட்டினகிரி தொகுதிகளிலும் வன்முறை வெறியாட்டம் நடந்திருக்கிறது.


இதில் படுகொலை செய்யப்பட்டவர்களும் படுகாயம் அடைந்தோரும், வன்முறைக்கு ஆளாக்கப்பட்டவர்களும் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற நிலையில், இதன் பின்னணியில் ஜாதிவெறி வன்மம் தலைதூக்கி நிற்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கட்சிகளை வழிநடத்தும் தலைவர்கள் தங்கள் கட்சியினருக்குத் தவறான பாதையை வழிகாட்டக் கூடாது என்பது மிகவும் முக்கியமானது. காவல்துறை இதில் பாரபட்சமின்றியும், இத்தகு வன்முறையாளர்களுக்கு அச்சத்தை உண்டாக்கும் வகையிலும் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.


கூலிப்படைகள் நாட்டில் தலைதூக்குவது ஆபத்தானதாகும். காவல்துறையின் உளவுத்துறையிடம் இதற்கான பட்டியல் கண்டிப்பாக இருக்கவே செய்யும். இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். படுகொலைக்கு ஆளான குடும்பத்தவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். குடும்பத்தினருக்கு மிகப்பெரிய அளவில் எல்லா வகையான உதவிகளையும் உடனடியாக அரசு மேற்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்