Skip to main content

“சமத்துவத்தை நோக்கிய தமிழினத்தின் பயணத்தில் மற்றுமோர் மைல்கல்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

Another milestone in Tamil's journey towards equality Chief Minister M.K.Stalin

 

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோயில்களுக்கு ஏற்கனவே 5 பெண் ஓதுவார்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து மேலும் 5 பெண் ஓதுவார்கள் உள்பட 15 ஓதுவார்களுக்குப் பணி நியமன ஆணைகளை அமைச்சர் சேகர்பாபு இன்று (25.09.2023) வழங்கினார்.

 

இது குறித்து அமைச்சர் சேகர்பாபு தனது எக்ஸ் (ட்விட்டர்) தள பதிவில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் 39 ஓதுவார் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்பட்டுள்ளன. 15 ஓதுவார் பணியிடங்களுக்குத் தேர்வானவர்களுக்கு இன்று (25.09.2023) பணி நியமன ஆணையை வழங்கினோம். எல்லோருக்கும் எல்லாம் என்ற முதலமைச்சர் வார்த்தைகளுக்கிணங்க, ஆணுக்குப் பெண் நிகர் என்பதை நிரூபிக்கின்ற வகையில் திராவிட மாடல் ஆட்சியில் 10 பெண் ஓதுவார்கள் இதுவரை நியமிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரியதாகும்” எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபுவின் எக்ஸ் தள பதிவைக் குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “சமத்துவத்தை நோக்கிய தமிழினத்தின் பயணத்தில் மற்றுமோர் மைல்கல். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமூகநீதிச் சாதனை மகுடத்தில் மற்றுமோர் வைரம். சுருங்கச் சொன்னால், திராவிட இயக்கப் பற்றாளர்கள் புகழ்வது போல், இது பெரியாரின் நெஞ்சில் நமது திராவிட மாடல் அரசு வைக்கும் பூ. இந்து சமய அறநிலையத்துறையையும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவையும் வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்