புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் 'என் மண் எண் மக்கள்' யாத்திரை ஞாயிற்றுக்கிழமை விராலிமலை தொகுதியிலும் திங்கள் கிழமை மாலை கந்தர்வக்கோட்டை, இரவு புதுக்கோட்டையிலும் நடந்தது.
தீபாவளி நேரம் என்பதால் எப்போதும் மக்கள் அதிகம் கூடும் கீழராஜ வீதி வழியாக யாத்திரையை அனுமதிக்க முடியாது என போலீசார் மறுத்து மாற்று வழியில் யாத்திரைக்கு அனுமதித்தனர். கீழராஜ வீதி தொடங்கும் அண்ணா சிலை அருகே யாத்திரையை முடித்து அண்ணாமலை பேசினார். அங்கே தீபாவளிக்காக தரைக்கடை போட்டிருந்த நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகள் வியாபாரம் போச்சேன்னு தலையில் கைவைத்துக் கொண்டனர்.
கூட்டத்தில் வழக்கம் போல திமுகவை விமர்சனம் செய்து பேசிய அண்ணாமலையிடம் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் சார்பில் ஒரு செம்மறி ஆட்டு கிடாக்குட்டியை பரிசாகக் கொடுத்தனர். அந்தக் கிடாய் குட்டியை வாங்கிய அண்ணாமலை எதிரே நின்ற பெண்களிடம் யாரெல்லாம் ஆடு வளர்க்குறீங்க என்று கேட்டவர், ஒரு பெண்ணை அழைத்து இந்த குட்டிக்கு சிவகாமி என்று பெயர் வைக்கிறேன். இதைக் கொண்டு போய் வளருங்க... நிறைய குட்டி போடும். அதை வச்சு முன்னேறுங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அண்ணே அது கிடாக்குட்டிண்ணே இது குட்டி போடாது என்று கீழே நின்ற பாஜக தொண்டர்கள் கூட்டமாக கத்தினர். இதைக் கேட்டும் கேட்காதது போல கடந்து போனார் அண்ணாமலை.
கூட்டத்தில் அண்ணாமலை பேசிய எல்லாவற்றையும் மறந்து கிடா குட்டிக்கு சிவகாமின்னு பேரு வச்சதோட நிறைய குட்டி போடும்னு சொன்னது தான் ட்ரண்டாகிக் கொண்டிருக்கிறது.