Skip to main content

“மதுக்கடைகளை மூடி விடுங்கள்... மாணவச் செல்வங்கள் சிறக்கட்டும்” - அன்புமணி ராமதாஸ் அறிக்கை

Published on 13/09/2022 | Edited on 13/09/2022

 

Anbumani Ramadoss has issued a statement liquor shops should be closed

 

வருங்காலத் தலைமுறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு ஆணையிட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் கொடுமைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்; இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சாட்டையை சுழற்றியிருப்பது வரவேற்கத்தக்கது.

 

தமிழ்நாட்டில் 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்  என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடரப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணையின் போது தான் நீதிபதிகள் இவ்வாறு கூறியுள்ளனர். ‘‘பள்ளி மாணவர்கள் சீருடையுடன் மது அருந்தும் புகைப்படங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது?’’ என்று நீதிபதிகள் கவலை கலந்த கோபத்துடன் வினா எழுப்பியுள்ளனர். உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெளிப்படுத்தியிருப்பது அவர்களின் கோபத்தை மட்டுமல்ல... ஒட்டுமொத்த சமூகத்தின் கோபத்தை என்பதை அரசு உணர வேண்டும்.

 

பள்ளி மாணவ, மாணவியர் பள்ளிகளிலும், பள்ளிகளுக்கு வெளியிலும் மது அருந்தும் கொடுமையும், அவலமும் பத்தாண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டன. கடந்த  2015&-ஆம் ஆண்டு திருச்செங்கோடு அரசு மகளிர் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்த 7 மாணவிகள் வகுப்பறையில் மது அருந்தியதும், அவர்களில் இருவர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு முன் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மது குடித்த 7 மாணவர்களும், மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மது அருந்திய 4 மாணவர்களும் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்.  கோவையில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் மதுபோதையில் சாலையில் தகராறு செய்தது மட்டுமின்றி, அவரை கண்டித்த பொதுமக்களையும் ஆபாச சொற்களால் திட்டிய நிகழ்வும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இவ்வளவு சீரழிவுகள் நடந்தும் கூட, அதை தடுப்பதற்கான எந்தவித ஆக்கப்பூர்வ நடவடிக்கையையும் ஆட்சியாளர்கள் எடுக்கவில்லை என்பதே வேதனையான உண்மை.

 

அண்மையில் கூட திருக்கழுக்குன்றம் பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியைச்  சேர்ந்த மாணவ, மாணவிகள், பள்ளிச்சீருடையில் அரசுப் பேருந்தில் நின்று கொண்டு மது அருந்தி , ரகளை செய்யும் காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவின. நேற்று முன்நாள் காஞ்சிபுரத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர் மதுபோதையில் அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். மது மாணவர்களின் வாழ்க்கையில் ஊடுருவி மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன. இனியும் இத்தகையப் போக்கை அனுமதிக்கக்கூடாது; மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவதன் மூலம் தான் மாணவர்களைக் காப்பாற்ற முடியும் என்று பாமக வலியுறுத்தி வரும் நிலையில் தான் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

 

மாணவர்கள் மதுவுக்கு அடிமையானது அவர்களின் தவறா? என்றால் இல்லை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். தெருவெங்கும் மதுக்கடைகளை திறந்ததும், மாணவர்கள் பணத்துடன் கைகளை நீட்டினால், பணத்தை எடுத்துக் கொண்டு மதுப்புட்டிகளை திணிக்கும் அளவுக்கு மது வணிகம் மலிந்து விட்டதும் தான் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைவதற்கு காரணம் ஆகும்.

 

2003ஆம் ஆண்டில் மதுக்கடைகள் அரசுடைமையாக்கப்பட்ட பின்னர் தெருக்கள் தோறும் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை விட பெரும் துரோகம் எதுவும் இருக்க முடியாது. வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் நூலங்களும், ஆலயங்களும் இருக்கின்றனவோ, இல்லையோ.... மதுக்கடைகள் இருக்கின்றன. மதுக்கடைகளை கடந்து தான் கிட்டத்தட்ட மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. முன்னொரு காலத்தில் மதுக்கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் தான் இருந்தன. அதனால் மது என்ற சாத்தான் குறித்து மாணவர்களுக்கு தெரியாமல் இருந்தது. ஆனால், இப்போது  மது மிகவும் எளிதாகவும், தாராளமாகவும் கிடைப்பது தான் மாணவச் செல்வங்களின் சீரழிவுக்கு காரணம்.

 

21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்பதும் மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் கோரிக்கைகளில் ஒன்றாகும். ஆனால், 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்வது சட்டப்படியே தடை செய்யப்பட்டுள்ளது.  இந்தத் தடையை செம்மையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில்  வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு விசாரணையின் போது, 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை அரசு மிகத் தீவிரமாக செயல்படுத்தும்; இதற்கான அறிவிப்பு பலகை அனைத்து மதுக்கடைகளிலும் அமைக்கப்படும்; தேவைப் பட்டால் மது வாங்க வருபவர்களின் வயதை சரி பார்க்க பிறப்புச் சான்றிதழ் கூட கோரப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்தது. ஆனால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி கூட மேற்கொள்ளவில்லை.

 

மது கலாச்சாரம் மற்றவர்களை எவ்வாறு பாதித்திருக்கிறதோ, அதே அளவுக்கு மாணவச் செல்வங்களையும் பாதித்திருக்கிறது. பள்ளிகளுக்கு அருகிலும், பள்ளி செல்லும் சாலைகளிலும் மதுக்கடைகளை திறந்து வைத்துக் கொண்டு, 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது என்று ஆணையிடுவதன் மூலமாக மட்டுமே மாணவர்களை மதுவின் பிடியிலிருந்து மீட்க முடியாது. மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவதன் மூலமாக மட்டுமே சீரழிந்து வரும் மாணவர் சமுதாயத்தை மீட்டெடுத்து சீரமைக்க முடியும்.

 

எனவே, வருங்காலத் தலைமுறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு ஆணையிட வேண்டும். அதன் மூலம், மாணவச் செல்வங்கள் மதுவுக்கு அடிமையாகாமல் கல்வியில் சிறக்கவும், சாதிக்கவும் தமிழ்நாடு அரசு துணை நிற்க வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்