Skip to main content

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை தூக்கி வீசிய அமமுகவினர்

Published on 21/11/2022 | Edited on 21/11/2022

 

AMMK relief materials affected people has come under criticism

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அமமுகவினர் தூக்கிவீசிய நிகழ்வு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 

 

தமிழ்நாட்டில், கடந்த நவம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோயில் உள்ளிட்ட கிராம பகுதிகளில், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், நீரில் மூழ்கி சேதமடைந்தன.

 

இதனையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  அப்பராஜபுரம்புத்தூர் கிராமத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பார்வையிட்டார். பின்னர், கிராம மக்களை சந்திக்க வந்த டி.டி.வி. தினகரனிடம், மழையால் சேதமடைந்த பயிர்களை காண்பித்து, விவசாயிகள் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.

 

AMMK relief materials affected people has come under criticism

 

இதையடுத்து, அங்கு கூடியிருந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் என 200 பேருக்கு, 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி மற்றும் போர்வை ஆகியவற்றை வழங்கிய டிடிவி தினகரன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து ஆறுதல் தெரிவித்தார்.

 

சிறிது நேரம் கழித்து, சீர்காழியில் பாதிக்கப்பட்ட மக்களை காண்பதற்காக, டி.டி.வி. தினகரன் சென்றுவிட்டார். பின்னர், அமமுக கட்சி நிர்வாகிகள் வைத்திருந்த நிவாரண பொருட்களை வாங்குவதற்காக, பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு முன்னேறியதால், அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், கூட்டம் கட்டுக்கடங்காததால், என்ன செய்வது என திகைத்து நின்ற அமமுக கட்சி நிர்வாகிகள், நிவாரண பொருட்களை பொதுமக்களிடம் தூக்கி வீசினர். அப்போது, அமமுகவினர் தூக்கி வீசிய பொருட்களை பிடிப்பதற்காக பொதுமக்கள் முண்டியடித்த போது, கூட்ட நெரிசலில் சிக்கிய ஒரு சிலர், திடீரென மயக்கம் அடைந்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள், பார்ப்போருக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்