Skip to main content

அமமுக பிரமுகர் படுகொலை! - பதட்டத்தில் மக்கள்!

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

financier passes away people are in nervous

 

திருப்பத்தூர் மாவட்டம், அமமுக மாவட்ட மாணவரணிச் செயலாளராக இருந்தவர் திருப்பத்தூர் நகரம் கவுதம்பேட்டையைச் சேர்ந்த 30 வயதான வானவராயன். இவர் ஃபைனான்ஸ் நிறுவனம் வைத்து வட்டித் தொழில் செய்துவந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும் இடையே தொழில் விரோதம் இருந்துள்ளது. இதனால், இரண்டு குடும்பத்தினரும் அடிக்கடி வாய்ச் சண்டை போட்டுக்கொண்டு இருந்துள்ளனர். 

 

இந்நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி இரவு ஃபைனான்ஸியர் வானவராயன், வட்டி வசூலித்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பி வந்துகொண்டு இருந்துள்ளார். இரவு 8 மணியளவில் பூங்காவனத்தம்மன் கோயில் முன்பு வானவராயன் வாகனத்தை மறித்துள்ளனர் 6 பேர் கொண்ட கும்பல். வானவராயன் உடனே தனது வண்டியை கீழே போட்டுவிட்டுத் தப்பி ஓடியுள்ளார். ஆனால், அந்த கும்பல் வானவராயனை விரட்டி விரட்டி வெட்டிப் படுகொலை செய்துள்ளது.

 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தார். மேலும், டி.எஸ்.பி தங்கவேல் தலைமையில் தனிப்படை அமைத்து கொலை செய்த கும்பலைப் பிடிக்க உத்தரவிட்டுள்ளார். அதேநேரத்தில் பிப்ரவரி 16ஆம் தேதி வானவராயன் குடும்பத்தினர், குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டும். சங்கர் குடும்பத்தின் மீது எங்களுக்குச் சந்தேகம் உள்ளது எனக்கூறி எஸ்.பி அலுவலகத்தின் முன் மறியல் செய்தனர். அவர்களை, அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். பின்னர், வானவராயன் குடும்பத்தினர் சங்கர் வீட்டை சூறையாடியுள்ளனர்.

 

காவல்துறை அதனைத் தடுத்து நிறுத்தி, கூலிப்படையைச் சேர்ந்த 12 பேரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்து விசாரணையில் இறங்கியுள்ளது. விசாரணையின் இறுதியில் இவர்கள் குற்றவாளிகளா இல்லையா என்பது தெரியவரும். அதேபோல் இந்த கொலை எதனால் நடந்தது என்கிற விபரமும் தெரியவரும் என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தினர். படுகொலை செய்யப்பட்ட வானவராயனக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. 25 வயதான வானவராயனின் மனைவி கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவத்தினால் அந்தப் பகுதி மக்கள் பதட்டத்தில் உள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்