"நான்கு மாநிலங்களுக்கான காவிரியில் தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்குமான பாத்யதையை கர்நாடகத்துடன் இழைந்து கத்தரித்துவிடும் திட்டத்திலான மோடியின் உருவாக்கமே அண்மைக் காவிரித் தீர்ப்பு! இந்த சதியில் தமிழகம் பலியாகிவிடாமல் எதிர்வினையாற்ற உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி" என்று தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சுதந்திர இந்தியாவில் வி.பி.சிங் அரசைத் தவிர மற்றெல்லா அரசுகளும் காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு ஆதரவாக தமிழகத்துக்கு துரோகம் செய்தன, செய்கின்றன.
வி.பி.சிங்தான் நியாயமாக நடந்து 1990ல் காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தார். அந்த நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு 1991ல் வெளியானது. அதன்படி, 205 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும்; தன் பாசனப் பரப்பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் கர்நாடகா உயர்த்தக் கூடாது.
ஆனால் தீர்ப்பின்படி நடந்துகொண்டதா கர்நாடகா? மாறாக, கலவரத்தை உருவாக்கி 12 தமிழர்களை படுகொலை செய்தது; லட்சம் தமிழர்களைத் துரத்தியடித்தது.
தமிழகத்துக்குத் தண்ணீர் விடாமல் தன் பாசனப் பரப்பை பல ஆயிரம் ஏக்கர் அதிகப்படுத்திக்கொண்டது.
2007ல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்தது. அதில் தமிழகத்திற்கு 192 டிஎம்சி நீர் என்று 13 டிஎம்சி நீர் குறைந்தது. இதைப் பங்கிட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர் ஒழுங்காற்றுக் குழுவை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும். ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின்தான் தீர்ப்பை அரசிதழிலேயே வெளியிட்டது காங்கிரசின் மன்மோகன் சிங் அரசு. அதன் பதவிக்காலமும் ஒருசில நாட்களிலேயே முடிவுக்கு வந்துவிட, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. அதன்பின் வந்த மோடி அரசு திட்டமிட்டே மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை; கர்நாடகத்தை தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடவும் சொல்லவில்லை. கர்நாடகமும் தண்ணீர் திறந்துவிடவில்லை.
இந்நிலையில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்கள் தங்கள் குறைகளை முறையிட்ட மீளாய்வு வழக்கின் தீர்ப்பு கடந்த பிப்ரவரி 16ந் தேதி வெளியானது.
அதில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி நீர் என்று இன்னும் 14.75 டிஎம்சி குறைந்தது. இத்தனைக்கும் தமிழகத்தில் காவிரிப் பாசனப் பரப்பு 44,000 சதுர கிலோமீட்டர். கர்நாடகாவிலோ 34,000 சதுர கிலோமீட்டர்தான்.
தமிழகத்துக்கு 14.75 டிஎம்சியைக் குறைத்து அதனை கர்நாடகாவில் குடிநீருக்கும் தொழிற்சாலைகளுக்கும் என்று ஒதுக்கியது உச்ச நீதிமன்றம்.
மற்ற மாநிலங்களுக்கான குடிநீர், தொழிற்சாலைகளுக்கான நீர் பற்றியெல்லம் உச்ச நீதிமன்றத்திற்குக் கவலையில்லை.
தமிழகத்தின் நீர் அளவைக் குறைத்ததற்கு இங்கு நிலத்தடி நீர் ஒரு குறிப்பிட்ட அளவு இருக்கிறதென்றும் காரணம் காட்டியது உச்ச நீதிமன்றம்.
இதெல்லாம் தீர்ப்பில் உள்ள சட்டமீறல்கள்.
அதேநேரம் தீர்ப்பில் உள்ள ”பூடகமான” சொற்கள் மற்றும் ”காவிரி நீரை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது; காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் இத்துடன் முடிவுக்கு வருகின்றன; 15 ஆண்டுகளுக்கு மேல்முறையீடு கிடையாது” என்கிற வரிகள், தீர்ப்பை டெல்லி தன் விருப்பப்படி கையாள வகை செய்கின்றன.
ஆகவேதான் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் கூறப்பட்ட காவிரி மேலாண்மை வாரியத்தையும் நீர் ஒழுங்காற்றுக் குழுவையும் இந்த மீளாய்வுத் தீர்ப்பு அமைக்கச் சொல்லவில்லை என்கிறது மோடி அரசு.
அதற்குப் பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்கப்படும்; அதன் தலைவர் உள்பட நிரந்தர உறுப்பினர்கள் 5 பேரை ஒன்றிய அரசு நியமிக்கும்; தற்காலிக உறுப்பினர்கள் 4 பேர் 4 மாநிலங்களிலிருந்து நியமிக்கப்படுவர் என்கிறது.
இப்போது புரிகிறதல்லவா? அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக மத்தியில் ஒற்றையாட்சியின் கீழ் மாநிலங்களை மட்டுமல்ல மாநிலங்களுக்கிடையேயான நதிகளையும் கொண்டுவருவதுதான் மோடியின் திட்டம்; அதன்படியே காவிரித் தீர்ப்பு உருவாக்கம்!
மோடி இப்படிச் செய்வதற்கு தமிழ்நாட்டை அவர் குறி வைப்பதுதான் காரணம். அதனால்தான் அணுவுலை, நியூட்ரினோ, சாகர்மாலா, விவசாய நிலங்களில் கெயில், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன், ஓஎன்ஜிசி, பெட்ரோலிய மண்டலம் என பேரழிவுத் திட்டங்களோடு, காவிரி நீரைத் தடுத்து தமிழகத்தைப் பாலைவனமாக்கும் இந்தத் திட்டம்.
அந்த அடிப்படையில், நான்கு மாநிலங்களுக்கான காவிரியில் தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்குமான பாத்யதையை கர்நாடகத்துடன் இழைந்து கத்தரித்துவிடும் திட்டத்திலான மோடியின் உருவாக்கமே அண்மைக் காவிரித் தீர்ப்பு!
இதை தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டும்; இந்த சதியில் தமிழகம் பலியாகிவிடாமல் எதிர்வினையாற்ற உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.’’