நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை காலமானார். அவருக்கு திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் மயில்சாமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “மயில்சாமி என்னுடைய நெடுங்கால நண்பர். அவரது 24 வயதில் இருந்தே எனக்குத் தெரியும். மிமிக்கிரி கலைஞராக இருந்து சினிமாவில் உயர்ந்தவர். அவர் தீவிர எம்ஜிஆர் ரசிகர். சிவன் பக்தர். அடிக்கடி நாங்கள் சந்திப்போம். நான் ஒரு குதூகலத்தில் சினிமா எப்படி இருக்கிறது என கேட்பேன். ஆனால் அவர் சினிமா பற்றி பேசவே மாட்டார்.
இருவரை பற்றி மட்டுமே பேசுவார். ஒன்று எம்.ஜி.ஆர் அடுத்தது சிவன். இருவரைப் பற்றித்தான் அவர் அடிக்கடி பேசுவார். நெருங்கிய நண்பர்களாக இருந்தும் இருவரும் சேர்ந்து அதிகமான படங்களில் நடிக்கவில்லை. அதை என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஒவ்வொரு தடவையும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருவண்ணாமலைக்குச் சென்று விடுவார். அங்குள்ள கூட்டத்தை பார்த்து ஏதோ தன் படம் வெளியாகி முதல்நாளில் நடிகர்கள் கொள்ளும் மகிழ்ச்சியைப் போல் அவர் இருப்பார்.
கார்த்திகை தீபம் தினத்தன்று அங்கு இருந்து எனக்கு போன் செய்வார். இம்முறை கார்த்திகை தீபத்தின் போதும் போன் செய்தார். படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் பேச முடியவில்லை. மூன்று முறை போன் செய்துள்ளார். என்னால் எடுக்கவே முடியவில்லை. அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் மறந்துவிட்டேன். அவரும் மறைந்துவிட்டார். விவேக் மற்றும் மயில்சாமி என இரு நகைச்சுவை நடிகர்களின் இழப்பு சினிமா, அவர்களது குடும்பம் மட்டுமல்ல சமூகத்துக்கும் பெரிய இழப்பு. சிவராத்திரி அன்று காலமானது ஏதோ தற்செயலாக நடந்தது கிடையாது. ஆண்டவனின் கணக்கு. தீவிர பக்தனை அவனின் உகந்த நாளில் அவன் கூட்டிக்கொண்டான். அவரது குடும்பத்தாருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை” எனக் கூறினார்.