அண்மையாகவே ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடல் உள் வாங்குவது என்பது அடிக்கடி நிகழ்ந்து வரும் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் இன்று பாம்பன் பகுதியின் வடக்கு பகுதியில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது, அந்த பகுதி மக்கள் மற்றும் மீனவர்களுக்கு அச்சத்தைக் கொடுத்துள்ளது.
காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் கடல் பகுதிகளிலும் திடீர் திடீரென கடல் உள்வாங்கும் நிகழ்வுகள் ஏற்பட்டு வருகிறது. சுனாமிக்கு பிறகு கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அடிக்கடி 100 முதல் 200 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.
இன்று பாம்பன் பகுதியின் வடக்கு மீன்பிடி துறைமுகம் பகுதியில் கடல் வழக்கத்திற்கு மாறாக 200 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிக் காணப்பட்டது. இதனால் 50க்கும் மேற்பட்ட நாட்டு மற்றும் பைபர் படகுகள் தரை தட்டி நின்றது. மேலும் கடல் வாழ் உயிரினங்களும் வெளியே தெரிந்தது. அதேநேரம் தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இதனால் அங்கு மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. வடக்கு கடல்பகுதி உள்வாங்கி இருக்கும் நேரத்தில் தெற்கு பகுதி கடல் சீற்றத்துடன் காணப்படுவது ஒரு பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.