Skip to main content

நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் மீது தாக்குதல்; 7 பேர் கைது

Published on 09/04/2023 | Edited on 09/04/2023

 

7 people arrested for assaulting  state president of ration  Shop Employees Union

 

சிதம்பரத்தில் தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் மீது கொலைவெறி தாக்குதல் தொடர்பாக கூலிப்படையினர் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்தனர். விற்பனையாளர் பணிக்கு பணம் வாங்கிக் கொடுத்ததில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் கூலிப்படையினர் மூலம் கொலை வெறி தாக்குதல் நடைபெற்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவராக உள்ளார் கே.ஜெயச்சந்திர ராஜா (54).  இவர் சிதம்பரம் லால்கான் தெருவில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வருகிறார்.  கடந்த மாதம் மார்ச் 21 ஆம் தேதி  சிதம்பரம் மானாசந்து அருகே இவர் தனது மோட்டார் பைக்கில் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள், அவரை பீர் பாட்டிலால் தலையில் தாக்கிவிட்டுத் தலைமறைவாயினர். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.  இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் உத்தரவின் பேரில் சிதம்பரம் ஏஎஸ்பி ஆர்.ரகுபதி மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

இந்நிலையில் கடந்த ஏப்.5 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஜெயச்சந்திர ராஜா, சிதம்பரம் மெய்க்காவல் தெருவில் மோட்டார் பைக்கில் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரது பைக்கை வழிமறித்து தலை, கை உள்ளிட்ட பல இடங்களில் கத்தியால் வெட்டி விட்டுத் தலைமறைவாயினர். இதில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அதனைத் தொடர்ந்து நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவரை தாக்கியவர்களைப் பிடிக்க கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் சிதம்பரத்தில் முகாமிட்டு சிதம்பரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி மேற்பார்வையில் 8 தனிப் படைகள் அமைத்து கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை, விருத்தாசலம், புதுக்கோட்டை  உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று  தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

கூலிப்படையினர் உள்ளிட்ட 7 பேர் கைது

தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு, ஜெயச்சந்திர ராஜாவை தாக்கிய கூலிப்படையினர் உள்ளிட்ட 7 பேரை சனிக்கிழமை அன்று கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையின் விபரம் வருமாறு: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றிய நாச்சியார்கோயிலைச் சேர்ந்த ரகு, சென்னை கூட்டுறவுத்துறை பதிவாளர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், விற்பனையாளர் பணியிடம் வாங்கித் தருவதாகக் கூறி தாக்கப்பட்ட சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திர ராஜா, பலரிடம் பணம் வாங்கி ரகுவிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. இதில் ஜெயச்சந்திர ராஜாவிற்கும், நாச்சியார்கோயிலைச் சேர்ந்த ரகு என்பவருக்கும் நியாயவிலைக்கடையில் விற்பனையாளர் பணிக்கு தேர்வு செய்ய பணம் வாங்கிக் கொடுத்ததில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ரகு, அவரது கூட்டாளிகளான கூலிப்படையினர் பிரவீன்குமார், முகமது யாசின், தமிம் அன்சாரி, குருமூர்த்தி, முகமது யூனுஸ் அப்பாஸ், டாடி பாலு, மணிகண்டன், கட்டபொம்மன், ஆறுமுகம், அசோக்குமார், வழக்குரைஞர் ஆனந்தன், பூச்சி வினோத் உள்ளிட்ட 13 பேர் சேர்ந்து திட்டமிட்டு ஜெயச்சந்திர ராஜாவை தீர்த்துக் கட்ட முடிவு செய்து கொலைவெறி தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.

 

இதனையடுத்து தனிப்படை போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் தாக்குதலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேற்கண்ட 13 பேரில் கும்பகோணம் நாச்சியார் கோயில் வேம்பகுளம் தெருவைச் சேர்ந்த பிரவீன்குமார் (35), திருவிடைமருதூர் சுல்தான் மகன் முகமது யாசின் (28), மன்னார்குடியைச் சேர்ந்த ஷேக் முகமது மகன் முகமது யூனுஸ் என்கிற அப்பாஸ் (20), நாச்சியார் கோயிலைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் கே.குருமூர்த்தி (21), கும்பகோணத்தைச் சேர்ந்த கணேசன் மகன் அசோக்குமார் (25), திருச்சி செம்பட்டைச் சேர்ந்த அறிவழகன் மகன் மணிகண்டன் (26), கும்பகோணம் சுந்தரபெருமாள் கோயில் ரயிலடித் தெருவைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் வழக்குரைஞர் ஆனந்தன் (46) ஆகிய 7 பேரை சனிக்கிழமை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நாச்சியார்கோயிலைச் சேர்ந்த ரகு, தமிம் அன்சாரி, டாடி பாலு, கலக்கி என்கிற கட்டபொம்மன், ஆறுமுகம், பூச்சி வினோத் ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும் தாக்குதலுக்குப் பயன்படுத்திய கத்தி மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்